தொடரும் போக்குவரத்து நெரிசல்: சுங்கச்சாவடி இடமாற்றப்படுமா?

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத்
Updated on
2 min read

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 சென்னை முதல் ஆந்திர நுழைவு எல்லையான தடா வரை உள்ள 43 கி.மீ தொலைவுக்கு ரூ. 418 கோடியே 80 லட்சம் மதிப்பில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிப்பாதையில் இருந்து 6 வழிப்பாதையாக மாற்றும் பணி கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
 ஆறு வழிப்பாதையாக மாற்றும் பணிகளைச் செய்துவரும் தனியார் கட்டுமான நிறுவனம், சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிப்பதற்காக சோழவரம் அருகே உள்ள நல்லூர் பகுதியில் சுங்கச்சாவடி அமைத்துள்ளது.
 சென்னையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவுள்ள நல்லூர் பகுதியில் சுங்கச்சாவடி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுங்க வரியை அதிகமாக வசூலிப்பதாகக் கூறியும் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இருந்தும் நல்லூர் சுங்கச்சாவடியில் இன்னமும் அதிக கட்டணம் வசூலிப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
 சென்னைக்கு அருகில் சுங்கச்சாவடி அமைத்துள்ளதால் சோழவரம், காரனோடை, பொன்னேரி, ஆண்டார்குப்பம், பஞ்செட்டி, அழிஞ்சிவாக்கம், தச்சூர், மாதவரம், நத்தம், பண்டிக்காவனூர் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் தாங்கள் சுங்கவரி செலுத்திய பிறகே சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாகக் கூறுகின்றனர்.
 சோழவரத்தில் இருந்து 10 கிமீ தொலைவுள்ள செங்குன்றத்துக்கு சென்று வர 100 ரூபாய் வரை சுங்க வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
 இதனால், மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என நீண்ட நாள்களாக கோரி வருகின்றனர்.
மாற்றுப் பாதையில் செல்லும் வாகனங்கள்
 வடசென்னை அனல் மின் நிலையம், எண்ணூர் துறைமுகம், சென்னை துறைமுகம், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் சரக்குப் பெட்டகக் கிடங்குகளுக்குச் செல்லும் வாகனங்கள் மேற்கண்ட இடத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியைக் கடந்து சென்றுவர ரூ. 300 முதல் ரூ. 400 வரை சுங்கவரி செலுத்துவதைத் தவிர்க்கும் வகையில் சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள தச்சூர் கூட்டுச் சாலை பகுதியில் பிரிந்து பொன்னேரி, மீஞ்சூர் வழியாகச் செல்கின்றன.
 இதன் காரணமாக பொன்னேரி - மீஞ்சூர், தச்சூர் - பொன்னேரி சாலை எப்பொழுதும் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. அதிக அளவிலான கனரக வாகனங்கள் செல்வதால் இச்சாலை குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
 எனவே போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமான அந்த சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யக் கோரியும், அதிக வசூல் செய்வதைத் தடுக்க வலியுறுத்தியும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com