

சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் ஊராட்சியில் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரால் தொடங்கப்பட்ட குப்பைகள் அகற்றும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சியில் கண்டிகை, சுங்குவார்சத்திரம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை திருமங்கலம் ஊராட்சி நிர்வாகத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சுங்குவார்சத்திரம்- கண்டிகை சாலையோரம் அரசு புறம்போக்கு இடத்தில் கொட்டி வந்தனர். இதனால் இச்சாலையில் துர்நாற்றம் வீசி வந்தது. இந்நிலையில் தூய்மை பாரத இயக்கத்தின் ஒர் அங்கமான தூய்மையே சேவை திட்டத்தின் கீழ், இப்பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றும் பணியை கடந்த செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி ஆட்சியர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் குப்பைகளை அகற்றும் பணியை தொடங்கி வைத்த அன்று மட்டும் குப்பைகளை அகற்றிய தூய்மைக் காவலர்கள், அதன்பின் குப்பைகள் அகற்றும் பணியை கடந்த இரண்டு மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் இச்சாலையில் தொடர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் குப்பைகள் அகற்றும் பணியை தொடங்கி வைக்கிறார் என்றதும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆனால் குப்பைகள் முழுவதுமாக அகற்றப்பட்டதா என எந்த அதிகாரிகளும் ஆய்வு செய்யவில்லை. இதனால் திருமங்கலம் ஊராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை அகற்றும் பணியை கடந்த இரண்டு மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் இச்சாலையைப் பயன்படுத்தும் நாங்கள் தான் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே குப்பைகளை அகற்றாத ஊராட்சி நிர்வாகம் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.