திருத்தணியில் உள்ள இரண்டு ஊராட்சிகளில் கிராம மக்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றதால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணி ஒன்றியம், சூர்யநகரம் ஊராட்சியில், சுதந்திர தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை காலையில் தொடங்கியது.
அப்போது, கூட்டத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இந்த ஊராட்சியில் உள்ள 7 குக்கிராமங்களுக்கு தகவல் தெரிவிக்காமல், ஊராட்சி செயலர் தனக்கு வேண்டிய பத்து நபர்களை மட்டும் வைத்து கிராம சபையை நடத்துகிறார். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் இருதரப்புக்கும் சமாதானம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதே போல், சிறுகுமி ஊராட்சியில் கிராம சாலைக்கு இடையூறாக தனிநபர் வீடு கட்டுவதை தடுத்து நிறுத்திய பிறகுதான் கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் எனக் கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த திருத்தணி ஒன்றிய ஆணையர் சிறுகுமி கிராம மக்களிடம் 2 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மீதமுள்ள 25 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் குறித்த நேரத்தில் அமைதியாக நடைபெற்றது.