வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மந்த கதியில் சாலை சீரமைப்புப் பணி: பொதுமக்கள் சாலை மறியல்

பொன்னேரி அருகே, மந்த கதியில் நடைபெற்று வரும் பொன்னேரி-மீஞ்சூர் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :21 மே 2018, 7:13 pm

பொன்னேரி அருகே, மந்த கதியில் நடைபெற்று வரும் பொன்னேரி-மீஞ்சூர் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி-மீஞ்சூர் சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும்.
இந்த சாலை வழியாக, அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், அத்திப்பட்டு புதுநகரில் உள்ள சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை, காட்டுப்பள்ளியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, கப்பல் கட்டும் தளம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், அதே பகுதியில் உள்ள தனியார் துறைமுகம் மற்றும் இடையஞ்சாவடி, கொண்டக்கரை, திருவொற்றியூர் பகுதிகளில் உள்ள தனியார் கண்டெய்னர் கிடங்குகள் போன்ற இடங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் இச்சாலை வழியேதான் சென்று வரவேண்டும்.
இதன் காரணமாக பொன்னேரி-மீஞ்சூர் சாலையில் எப்பொழுதும் அதிக அளவு கனரக வாகனங்களின் போக்குவரத்து நிறைந்திருக்கும். இதனால், குறுகலாக இருந்த சாலையை விரிவு படுத்தும் நோக்கில், கடந்த ஆண்டு பொன்னேரி-மீஞ்சூர் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கின. இதற்காக சாலையின் இருபுறமும் 50ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 200 க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டன.
அதே போன்று, மீஞ்சூர் ரயில் நிலையம் அருகில் இருந்த
70க்கும் மேற்பட்ட கடைகள் கடந்த மாதம் அகற்றப்பட்டன. இதனை தொடர்ந்து சாலை விரிவாக்கப் பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பொன்னேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் இருந்து வேண்பாக்கம் வரை ஜல்லிகள் கொட்டப்பட்டு அப்பகுதியில் சாலை அமைக்கப்படாமல் உள்ளது.
இதனால் கனரக வாகனங்கள் செல்லும் போது புழுதி பறப்பதால், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.