தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பழுதால் காப்புக் காடுகளில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

திருவள்ளூர் மாவட்ட வன அலுவலகத்திலிருந்து தொலைத் தொடர்பு மூலம் பொருத்தப்பட்டுள்ள சூரியஒளி மின்சாரத்தில் இயங்கும் தானியங்கி
பூண்டி அருகே நம்பாக்கம் காப்புக் காட்டில் சேதமடைந்துள்ள  சூரிய ஒளியில் இயங்கும் தானியங்கி கண்காணிப்பு கேமரா.
பூண்டி அருகே நம்பாக்கம் காப்புக் காட்டில் சேதமடைந்துள்ள  சூரிய ஒளியில் இயங்கும் தானியங்கி கண்காணிப்பு கேமரா.
Updated on
2 min read



திருவள்ளூர் மாவட்ட வன அலுவலகத்திலிருந்து தொலைத் தொடர்பு மூலம் பொருத்தப்பட்டுள்ள சூரியஒளி மின்சாரத்தில் இயங்கும் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் உடைந்து பழுதடைந்துள்ளதால், காப்புக் காடுகளில் உள்ள செம்மரங்கள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
  50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில்...:  திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி, வெங்கல், செங்குன்றம், பள்ளிப்பட்டு, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பென்னலூர்பேட்டை உள்ளிட்ட 9 வனச்சரகங்களில் 70 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் காப்புக் காடுகள் உள்ளன. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்காடுகளில் முக்கியமாக 3.50 லட்சத்திற்கும் அதிகமான செம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன. 
இதேபோல், இக்காடுகளில் முந்திரி, சந்தனம், தேக்கு, மருது, மூங்கில், குங்கிலியம் போன்ற 80 ஆண்டுகள் பழமையான மரங்கள் அதிகமாக அடர்ந்து காணப்படுகின்றன. இதனால், காப்புக் காடுகள் எப்போதும் பசுமையாகவே இருந்து வருவதால், இப்பகுதியில் மழைப்பொழிவும் நன்றாக இருந்து வருகிறது. இக்காடுகள் பசுமையாக அடர்ந்து காணப்படுவதால் மான்கள், கீரிகள், முயல்கள், காட்டுப்பன்றிகள் ஆகியவை அதிகமாக வசிக்கின்றன.
16 இடங்களில்....: தற்போது ஒவ்வொரு காப்புக் காட்டிலும் செம்மரக் கடத்தல் மற்றும் ஓடைப்பகுதியில் மணல் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், ஆள் பற்றாக்குறை காரணமாக, ஒவ்வொரு காப்புக் காட்டையும் அலுவலகத்தில் இருந்து காணொலி வசதியுடன் அகன்ற தொலைக்காட்சி மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு காப்புக் காட்டிலும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணிநேரமும் சூரிய ஒளி மின்சாரம் மூலம் இயங்கும் வகையில் தலா ரூ.2 லட்சம் மதிப்பில் 4 கி.மீ தொலைவுக்கு துல்லியமாக கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல் செம்மரங்கள் மற்றும் தேக்கு மரங்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகளான திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் வெங்கல், செங்குன்றம், பூண்டி, நம்பாக்கம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 16 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 
இது குறித்து இயற்கை ஆர்வலர் ராஜேந்திரன் கூறியது:
பூண்டி, வெங்கல் மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பழமையான செம்மரங்கள் நன்றாக வளர்ந்துள்ளன. 3.50 லட்சத்திற்கும் அதிகமான செம்மரங்கள் இங்கு உள்ளன. செம்மரங்களின் உள்ளே இருக்கும் சிவப்பு நிறத் தண்டானது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டதாகும். மேலும், தலைவலி, காய்ச்சல், தோல் நோய்கள், உடல் வெப்பத்தை தணித்தல் உள்ளிட்டவற்றுக்கு வெளி மருந்தாகவும் பயன்பட்டு வருவதால், வெளிச்சந்தையில் அதிக விலை கிடைக்கிறது. இதனால் இந்த மரங்களைக் கடத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதுபோன்ற காரணங்களால் செம்மரங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 
தற்போது காப்புக் காடுகளிலும் வனத்துறை பணியாளர்கள் பற்றாக்குறையால், கண்காணிப்பு கேமராக்களை நம்பியே உள்ளனர். இப்போது அதுவும் செயலிழந்து செம்மரங்களின் கடத்தலையும், விலங்குகளின் வேட்டையையும் தடுக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. இந்த நிலையை மாற்ற, பழுதான கேமராக்களை சீரமைக்கும் வரை ஆயுதம் தாங்கிய வனத்துறை பாதுகாவலர்களைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
 இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், காப்புக் காடுகளில் 16 இடங்களில் 24 மணிநேரமும் இயங்கக் கூடிய சூரிய ஒளி தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
தற்போது காப்புக் காடுகளில் உள்ள தொலைத் தொடர்பு கோபுரங்கள் மீது விலங்குகள் ஏறி, தொலைத் தொடர்பு வயர்களில் தொங்கி விளையாடும் காரணத்தால் அவை துண்டாகி விடுகின்றன. அதேபோல், கண்காணிப்பு கேமரா மற்றும் சூரிய ஒளி மின்தகடுகளும் சேதமாகி விடுகின்றன. 
தற்போது இவற்றை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக திட்ட மதிப்பீடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநில வனத்துறை அலுவலகம் அனுமதி அளித்ததும் இப்பணிகள் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
செயல்படாத கேமரா 
செம்மரங்களின் கடத்தல் மற்றும் விலங்குகளின் வேட்டையைத் தடுக்கும் நோக்கத்திலேயே தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் பூண்டி சாலையில் நம்பாக்கம் காப்புக் காடுகளில்தான் 100 ஆண்டுகள் பழமையான செம்மரங்கள்அதிக அளவில் வளர்ந்து காணப்படுகின்றன. இங்கு பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளி மின்சாரம் மூலம் இயங்கும் கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதற்காக வனத்துறை அலுவலகத்திலும், இதற்கான நவீன கணிப்பொறி மற்றும் கண்காணிப்பு அறை செயல்பட்டு வந்தது. இந்த அறையில் இருந்து 16 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடிந்தது. ஆனால், கடந்த வார்தா புயலின்போது இந்த கோபுரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. தற்போது அவை சரிசெய்யப்பட்ட பிறகும் தகவல் தொடர்பு இதுவரை வழங்கப்படவில்லை என காப்புக் காட்டில் பணியாற்றும் வனத்துறையினர் புகார் தெரிவிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com