ஓராண்டாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது:  உவர்ப்பு நீரைப் பருகும் கிராமத்தினர்

திருவள்ளூர் அருகே கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.19 லட்சத்தில்
Updated on
2 min read

திருவள்ளூர் அருகே கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.19 லட்சத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு இயந்திரம் செயல்படாததால் மீண்டும் உவர்ப்பு நீரைப் பருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நத்தமேடு ஊராட்சியில் நத்தமேடு, மேட்டுத்தெரு, காலனி, ஒத்தவாட தெரு, கன்னடப்பாளையம், அண்ணாநகர் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 
இப்பகுதியில் பொதுமக்களுக்கு நாள்தோறும் திறந்தவெளி கிணறு, சிறு மின்விசை குடிநீர்த் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இக்கிராமத்தில் இருந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி சேதமடைந்துள்ளதாகக் கூறி கடந்த 3 ஆண்டுகளுக்கு அகற்றப்பட்டது. அதனால் குடிநீரை சேமித்து விநியோகம் செய்யாமல், நேரடியாக குழாய் மூலம் விநியோகம் செய்து வருவதால், மின்தடை காலங்களில் மிகவும் அவதிப்படவும் நேர்ந்தது. 
இந்நிலையில், கிராமங்களில் சுத்தமான குடிநீர், கட்டணமில்லாமல் இலவசமாக வழங்கும் திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது. இதில் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதல் கட்டமாக நத்தமேடு,  ஈக்காடு கண்டிகை, வெள்ளியூர் ஊராட்சிகளில் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு சுத்தமான குடிநீர் இலவசமாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் நத்தமேடு கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.19 லட்சத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் பக்கத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களும் மிகுந்த பயன்பெற்றனர்.
தற்போது ஆழ்துளைக்கிணற்றில் போதுமான தண்ணீர் இருந்தும், சுத்திகரிப்பு இயந்திரம் செயல்படாமல் பழுதடைந்துள்ளது. இதனால் மீண்டும் கிராம மக்கள் உவர்ப்பு நீரையை பருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்,  இயந்திரக் கோளாறை சரி செய்வதற்கு எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பூட்டி வைத்துள்ளனர்.
இதுகுறித்து நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குமரேசன், ஏழுமலை ஆகியோர் கூறுகையில், இதற்கு முன்பு உவர்ப்பு நீரையே கிராம மக்கள் பருகி வந்தனர். இதைக் கருத்தில்கொண்டே கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கத்தில் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நன்றாகச் செயல்பட்டு வந்ததால் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் இலவசமாக நாள்தோறும் காலை 7 மணி முதல் 9 மணி வரையில் விநியோகிக்கப்பட்டது. 
இந்நிலையில் திடீரென இயந்திரக் கோளாறு காரணமாக கடந்த ஓராண்டாக இச்சுத்திகரிப்பு நிலையம் செயல்படாத நிலையில் உள்ளது. 
அதனால் கிராம பொதுமக்கள் குடிநீரின்றி நீண்ட தொலைவுக்குச் சென்று விவசாயக் கிணறுகளில் குடிநீர் எடுத்து வரவேண்டியுள்ளது.கிராம மக்களின் நிலையை கருத்தில்கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தைச் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமங்களிலும்  சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்து ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கும் திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் மாநில அளவில் முதல் கட்டமாக மக்கள் தொகை அதிகம் கொண்ட ஊராட்சிகள்  தேர்வு செய்யப்பட்டு படிப்படியாக இத்திட்டம்  செயல்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 14  ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 526 ஊராட்சிகள் உள்ளன. இதில் ஆண்டுதோறும் ஊராட்சி ஒன்றியங்களில் குறிப்பிட்ட  ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ஆழ்துளைக் கிணறு அமைத்து, சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டது. அந்த வகையில் நத்தமேடு ஊராட்சியில் ரூ.19 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது என்றார்  அவர்.
கடந்த ஓராண்டாக இந்த இயந்திரம் செயல்படாததால் பொதுமக்கள் மீண்டும் உவர்ப்பு நீரைப் பருக வேண்ட நிலை ஏற்பட்டுள்ளது. அரசு இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com