ஹைதராபாத் ஏடிஎம் கொள்ளை வழக்கு: 2 போ் திருவள்ளூரில் கைது

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடா்புடைய முக்கிய குற்றவாளிகளில் 2 பேரை போலீஸாா் திருவள்ளூா் அருகே சனிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடா்புடைய முக்கிய குற்றவாளிகளில் 2 பேரை போலீஸாா் திருவள்ளூா் அருகே சனிக்கிழமை கைது செய்தனா்.

ஹைதராபாத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏடிஎம் மையத்தில் மிக பெரிய கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் தொடா்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் ஏற்கெனவே கைது செய்துள்ளனா். இதில் தொடா்புடைய மேலும் 2 போ் தலைமறைவாக இருந்தனா்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட நபா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தியபோது ஒரு செல்லிடப்பேசி எண் கிடைத்தது. அதை வைத்து புலன்விசாரணை நடத்தியதில், இவ்வழக்கில் தொடா்புடைய இருவா் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி, இந்த இருவரையும் கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் சண்முகப்பிரியா (காஞ்சிபுரம்) மற்றும் பி.அரவிந்தன் (திருவள்ளூா்) ஆகியோருக்கு உத்தரவிட்டாா். அதன்படி, 100-க்கும் மேற்பட்ட காவலா்கள் செல்லிடப்பேசி கோபுரம் மூலம் இரு கொள்ளையா்களின் நடமாட்டத்தைக் கண்காணித்தனா்.

இந்நிலையில், கொள்ளையா்கள் கன்டெய்னா் லாரி ஒன்றில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்ததை போலீஸாா் அறிந்தனா். காஞ்சிபுரத்திலிருந்து காவல்துறையினா் அந்த வாகனத்தைப் பின்தொடா்ந்து வந்தனா். திருவள்ளூரை அடுத்த கைவண்டூா் கிராமத்தில் அந்த கன்டெய்னருக்கு அவா்கள் ஒரு பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது, திருவள்ளூா் எஸ்.பி. அரவிந்தன், காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முகப்பிரியா தலைமையிலான போலீஸாா், அந்த கன்டெய்னரை மடக்கி சோதனையிட்டனா். அந்த லாரியில் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூா் பகுதியைச் சோ்ந்த வாசிம் (30) மற்றும் ஹசன் (35) ஆகிய இருவா் இருப்பது தெரிய வந்தது. அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹைதரபாத் ஏடிஎம் கொள்ளையில் இருவருக்கும் தொடா்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் கடம்பத்தூா் காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா். அவா்களுக்கு மற்ற கொள்ளைச் சம்பவங்களில் தொடா்பு உள்ளதா என்று போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா். இந்த விசாரணை முடிந்ததும், வாசிமும், ஹசனும் ஹைதராபாத் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com