திருவள்ளூர் அருகே கார் மீது லாரி மோதல்: புதுமண தம்பதி சாவு
By DIN | Published On : 01st November 2021 10:29 AM | Last Updated : 01st November 2021 10:29 AM | அ+அ அ- |

விபத்தில் உயிரிழந்த புதுமண தம்பதி மனோஷ்குமார்-கார்த்திகா.
திருவள்ளூர் அருகே லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதிய விபத்தில் திருமணமாகி 4 நாள்களே ஆன புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மப்பேடு காவல் நிலைய போலீஸார் தரப்பில் கூறியதாவது. அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (31). இவர் மருந்து விநியோகஸ்தராக தொழில் செய்து வருகிறார். இவருக்கும் தாம்பரம் பெருங்களத்தூரைச் சேர்ந்த மருத்துவரான கார்த்திகா (30). இவர் தாம்பரம் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த 4 நாள்களுக்கு முன்னர் 28-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் பெருங்களத்தூரில் உள்ள மனைவியின் தாயார் வீட்டிலிருந்து அரக்கோணம் வீட்டிற்கு செல்வதற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தங்களது வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர். அந்த வாகனத்தை மனோஜ்குமார் ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது, திருவள்ளூர் அருகே மப்பேடு போலீஸ் எல்லைக்குள்பட்ட பூந்தமல்லி-அரக்கோணம் நெடுஞ்சாலையில் கூவம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
இதையும் படிக்க- 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
அந்த நேரத்தில் அரக்கோணத்திலிருந்து எதிரே வந்த சிமெண்ட் டேங்கர் லாரி கூவம் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி கவிழ்நது விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் இருந்த புதுமண தம்பதியர் டாக்டர் கார்த்திகா-மனோஜ் குமார் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மப்பேடு காவல் நிலைய போலீஸார் சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு லாரியை அப்புறப்படுத்தினர்.
அதைத் தொடர்ந்து காரை உடைத்து புதுமண தம்பதியரின் சடலங்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருமணமாகி 4 நாள்களே ஆன நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்று திரும்பும் போது விபத்தில் சிக்கி புதுமண தம்பதியர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.