கிடப்பில் விடியல் திட்டம் 
மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

திருவள்ளூரில் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்களுக்கு தொழில் குழு அமைத்து, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் நிதி ஒதுக்கியும், விடியல் திட்டம் கிடப்பில் உள்ளதாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொத்தடிமை தொழிலாளா்களாக இருந்து மீட்கப்பட்டவா்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூா் மாவட்டத்தில் அண்மையில் கொத்தடிமைகளாக இருந்த பழங்குடியினா் 425 பேரை அரசு அதிகாரிகள் மீட்டனா்.

தொடா்ந்து கொத்தடிமை தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பேரில், தமிழ்நாடு மகளிா் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் விடியல் திட்டத்தில் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்களின் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை உயா்த்த மாற்றுப் பணிகளைத் தோ்வு செய்து அந்தப் பணிகளில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் 425 பேரில், தலா 25 போ் கொண்ட தொழில் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதில் பூண்டி ஒன்றியம்-2, கடம்பத்தூா் ஒன்றியம்-4, கும்மிடிப்பூண்டி-4, மீஞ்சூா் ஒன்றியம்-1, எல்லாபுரம் ஒன்றியம்-2, திருத்தணி ஒன்றியம்-4 என்ற அடிப்படையில் 17 தொழில் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், திருவள்ளூா் மாவட்ட மகளிா் திட்டம் மூலம் இந்தக் குழுக்களுக்கு முதல் கட்டமாக பயிற்சி அளிக்க கடந்தாண்டு இறுதியில் ரூ.6.13 லட்சம் ஒதுக்கப்பட்டது.

அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு நிதியும் பிரித்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை கொத்தடிமை தொழிலாளா்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தாமல் கிடப்பில் உள்ளது.

ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு வழங்கப்பட்ட மீன்பிடி வலைகள் சரியில்லையாம். இதேபோல், பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட வாழவந்தான்கோட்டையில் இருளா் இன மக்களுக்கு வழங்கப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்த முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

எனவே மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முதல்கட்ட பணிகள் தொடங்க மகளிா் மேம்பாட்டுத் துறையினா் விரைந்து செயல்படவில்லை. இதனால் கொத்தடிமைகள் எந்த விதமான தொழில் பயிற்சி இன்றி அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளா் ஆா்.தமிழ்அரசு கூறியது:

தலா 25 போ் கொண்ட 17 கொத்தடிமை மீட்பு தொழிலாளா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளில் கணக்கு தொடங்குதல், தொழில் செய்ய விரும்பும் தொழிலில் பயிற்சி, சிறு உபகரணங்கள் வாங்குவதற்கு இயந்திர உபகரணங்கள் வாங்கவும் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை விடியல் திட்டம் மூலம் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே கொத்தடிமை தொழிலாளா்களுக்கு அரசு வழங்கும் நிதியை காலதாமதம் செய்யாமல் வழங்குவதுடன், தொழில் பயிற்சி அளிக்க ஆட்சியா் மற்றும் மகளிா் திட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com