கடையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கு: 2 பேர் கைது

ஆவடி அருகே நகைக்கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் உடந்தையாக இருந்த 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கடையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கு:  2 பேர் கைது
dinmani online

ஆவடி, : ஆவடி அருகே நகைக்கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் உடந்தையாக இருந்த 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் கோயில் பிரதான சாலையைச் சேர்ந்தவர் பிரகாஷ் (33). நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி பிரகாஷ் கடையில் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, காரில் வந்த 4 பேர் கடைக்குள் புகுந்து ஷட்டரை மூடினர்.

பின்னர், துப்பாக்கியைக் காட்டி பிரகாஷை மிரட்டி கைகளைக் கட்டி போட்டு, கடையின் லாக்கரிலிருந்து சுமார் ரூ.1.5 கோடி தங்க நகைகள், 5 லட்சம் கொள்ளையடித்து சென்றனர்.

புகார் அடிப்படையில் முத்தாபுதுப்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கொள்ளை கும்பல் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது. இதையடுத்து 8 தனிப் படைகள் அமைத்து கொள்ளைக் கும்பலை போலீஸார் தேடி வந்தனர்.

இதற்கிடையில் கொள்ளை நடைபெற்ற கடை அருகே பதிவான கைப்பேசி சிக்னல் மூலம் பெரியமேட்டில் தங்கிருந்த 2 பேரை போலீஸார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலம், ஹரிபுரா கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (26), அதே பகுதி, தூங்கார்வா கிராமத்தைச் சேர்ந்த ஷெத்தனராம் (25) ஆகியோர் என்பதும், இவர்கள் கடந்த ஒரு மாதமாக சென்னையில் தங்கி இருந்து, கொள்ளையர்களுக்கு தங்க இடம் கொடுத்து, இரு சக்கர வாகனங்களில் கடையை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட திட்டம் தீட்டி கொடுத்தது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து இரண்டு இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து போலீஸார் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் ராஜஸ்தான் சென்றிருந்த தனிப்படை போலீஸôர் முக்கியக் குற்றவாளிகளையும் கைது செய்து இருப்பதாகவும், கொள்ளையடித்த நகைகள், பணத்தை மீட்டு அவர்களை ஆவடிக்கு அழைத்து வருவதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com