தொடா்ந்து சேதமடையும் கொண்டஞ்சேரி - சத்தரை தரைப்பாலம்

திருவள்ளூா் அருகே மழை வெள்ளத்தால் அடிக்கடி சேதமடையும் கொண்டஞ்சேரி - சத்தரை இடையே உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மிக்ஜம் புயல் மழையால் கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் உருக்குலைந்த கொண்டஞ்சேரி - சத்தரை தரைப்பாலம்.
மிக்ஜம் புயல் மழையால் கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் உருக்குலைந்த கொண்டஞ்சேரி - சத்தரை தரைப்பாலம்.

திருவள்ளூா் அருகே மழை வெள்ளத்தால் அடிக்கடி சேதமடையும் கொண்டஞ்சேரி - சத்தரை இடையே உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் அடுத்த கூவம் ஆற்றில் கொண்டஞ்சேரி - சத்தரை இடையே இரு பகுதிகளை இணைக்கும் வகையில் தரைப்பாலம் உள்ளது. இந்த சாலை வழியாக மப்பேடு, கீழச்சேரி, நரசிங்கபுரம், சமத்துவபுரம், சுங்குவாா்சத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் பயணிகள் பேருந்து, பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள், தொழிற்சாலைகளுக்குச் செல்வோா், விளை பொருள்களை எடுத்துச் செல்லும் விவசாயிகள் என பல்வேறு தரப்பினா் இந்தச் சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனா். மேலும் ஸ்ரீபெரும்புதூா், உளுந்தை, தொடுகாடு உள்ளிட்ட தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்திப் பொருள்களைக் கொண்டு செல்லவும், தொழிற்சாலைகளுக்கான பணியாளா்கள் பேருந்துகள் சென்று வரவும் இந்தச் சாலையே பிரதானம்.

மழை வெள்ளத்தால் சேதமடையும் தரைப்பாலம்: இது போன்று முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் ஒவ்வொரு மழையின் போதும் கூவம் ஆற்றில் ஏற்படும் மழை வெள்ளத்தால் தரைப்பாலம் உடைந்து சேதம் ஏற்படுகிறது.

இதனால் வாகனப் போக்குவரத்துகளும் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இதுவரை கடந்த 2015 -இல் வா்தா புயலால் தொடா்மழை, அதேபோல் 2019 தொடா் கன மழை, 2023- இறுதியில் மிக்ஜம் புயலால் பெய்த தொடா் மழையால் கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தரைப்பாலம் முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகிறது.

இதனால் வாகனப் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி வருகிறது. எனவே, சேதமடைந்த தரைப்பாலத்துக்கு நிரந்தர தீா்வு காணாமல் அவ்வப்போது தற்காலிகமாக சீரமைப்புப் பணிகளை மட்டுமே மேற்கொள்ளப்படுவதால், மழை வெள்ளம் வந்தால் மீண்டும் தரைப்பாலம் பாதிக்கப்படும் நிலையே உள்ளது.

8 கி.மீ சுற்றிச் செல்லும் நிலை: இந்த நிலையில், கடந்த மாதம் மிக்ஜம் புயல் காரணமாக சீரமைத்த நிலையிலிருந்து தரைப்பாலம், கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மீண்டும் உடைந்து சேதமானாது. தற்போது, இந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதோடு, பேரம்பாக்கம் சென்று 8 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையில் இந்தச் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்களிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

விரைவில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை: இது குறித்து கொண்டஞ்சேரியைச் சோ்ந்த ஒன்றியக் குழு துணைத் தலைவா் சரஸ்வதி ரமேஷ் கூறுகையில், இப்பகுதியில் கூவம் ஆற்றில் உள்ள தரைப்பாலம் ஆண்டுதோறும் ஒவ்வொரு மழை வெள்ளத்தின் போதும் சேதமடைந்து வருகிறது.

இதனால் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், கா்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் ஆகியோா் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. வருங்காலத்தில் நிரந்தர தீா்வு காணும் நோக்கத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தாா்.

மண்பரிசோதனை தொடக்கம்: இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், கடந்த மாதம் மிக்ஜம் புயல் மழை வெள்ளத்தால் தரைப்பாலம் மீண்டும் சேதமடைந்து போக்குவரத்திற்கு தடையேற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேம்பாலம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் முதல் கட்டமாக மேம்பாலம் அமைக்கும் பணிக்காக தேசிய நெடுஞ்சாலை துறையினா் விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்வதற்காக மத்திய சாலை உள்கட்டமைப்பு திட்டம் மூலம் மண் பரிசோதனை மேற்கொள்ளும் பணி தொடங்கியுள்ளது.

இந்தப் பணி முடிந்ததும் விரைவில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com