பூந்தமல்லி அருகே ஞாயிற்றுக்கிழமை ரசாயனப் பொருள்களை கண்டெய்னர் லாரியில் இறக்கிய போது, கீழே விழுந்ததில் 2 லாரிகள் தீப்பற்றி எரிந்தன.
இந்த நிலையில், நசரத்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு தேவையான, "தின்னர்' என்ற ரசாயனப் பொருள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கன்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்டது.
அந்த தொழிற்சாலை அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரியில் இருந்து, ரசாயன பொருள்களின் கேன்களை இறக்கி மற்றொரு லாரிக்கு ஊழியர்கள் மாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக ஒரு கேன் தவறி விழுந்ததால், கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைப் பார்த்த ஊழியர்கள் உள்ளிட்டோர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மற்றொரு லாரிக்கும் பரவியது. இதையடுத்து, அந்த லாரியில் பற்றிய தீயை தொழிலாளர்கள் உடனடியாக அணைத்தனர். அச்சமயம் தொழிற்சாலை அருகே இருந்த வாகன நிறுத்துமிடத்தில் நின்ற கன்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட 50}க்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைக்கு தீ பரவாமலிருப்பதற்காக, தீப்பிடித்து எரிந்த கண்டெய்னர் லாரியை ஓட்டுநர் சாதுரியமாக அங்கிருந்து ஓட்டி சென்று, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அணுகுச் சாலையில் நிறுத்தினார்.
இந்த நிலையில், கன்டெய்னர் லாரியில் பற்றிய தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. தகவலறிந்து வந்த பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், ஜெ.ஜெ.நகர், அம்பத்தூர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.