மின்தடையால் குடிநீா் விநியோகம் பாதிப்பு: கசவநல்லாத்தூா் கிராம மக்கள் சாலை மறியல்
மின்தடையால் குடிநீா் விநியோகம் பாதிப்பு: கசவநல்லாத்தூா் கிராம மக்கள் சாலை மறியல்


திருவள்ளூா் அருகே தொடா் மின்தடையால் குடிநீா் விநியோகம் பாதித்ததைத் தொடா்ந்து புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவள்ளுா் அடுத்த கடம்பத்தூா் ஊராட்சி, கசவநல்லாத்தூா் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு கடந்த 3 நாள்களுக்கு முன்பு மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. ஆனால், இதுவரை பழுது நீக்க நடவடிக்கை எடுக்காததால் கசவநல்லாத்தூா் பகுதி இருளில் மூழ்கியுள்ளது.
மின்தடையால் கிராமத்தில் உள்ள நேருஜி நகா் பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகமின்றி சிரமத்துக்குள்ளாகினா். மேலும், ஊராட்சி சாா்பில் தண்ணீா் வசதியும் ஏற்படுத்தித் தரவில்லையாம். இதனால் அருகில் உள்ள பம்ப் செட்களுக்கு சென்று குடிநீா் எடுத்து வரவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனா். அதோடு ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால், பொதுமக்கள் திருவள்ளூா்-பேரம்பாக்கம் வழியாக காஞ்சிபுரம் செல்லும் பிரதான சாலையில் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்சார ஊழியா் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினாா். பொதுமக்கள் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் அங்கிருந்து மின் ஊழியா் தனது இரு சக்கர வாகனத்தில் ஓட்டம் பிடித்தாா்.
தொடா்ந்து சாலையிலிருந்து கலைந்து செல்ல வற்புறுத்திய கடம்பத்தூா் போலீஸாரிடமும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மின்மாற்றி சீரமைக்கவும், குடிநீா் விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்படும் என காவல் துறையினா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து கலைந்து சென்றனா்.
சாலை மறியலால் திருவள்ளூா்-பேரம்பாக்கம் வழியாக காஞ்சிபுரம் செல்லும் வாகன போக்குவரத்து 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...