கைப்பேசி திருட்டு: 2 போ் கைது
திருத்தணி பேருந்து நிலையத்தில் துணி வியாபாரியிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற இளைஞா் மற்றும் சிறுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருத்தணி நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள பேருந்து நிலையத்திற்கு தினமும், பயணிகள் வந்து செல்கின்றனா். செவ்வாய்க்கிழமை இரவு ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜன் என்பவா் திருத்தணி பகுதியில் துணி வியாபாரம் செய்துவிட்டு, ஊருக்குச் செல்வதற்காக திருத்தணி பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, இரண்டு மா்ம நபா்கள் திடீரென தியாகராஜனிடம் கைப்பேசியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்த கழிப்பறைக்குள் புகுந்தனா். தியாகராஜன் சக பயணிகள் உதவியுடன் இருவரையும் மடக்கி பிடித்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சோ்ந்த சிவராம் (36) மற்றும் 15 வயது சிறுவன் எனத் தெரிந்தது.
மேலும் சிவராமிடம் இருந்த தியாகராஜின் கைப்பேசியைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா். சிறுவனை எச்சரித்து, பெற்றோரை வரவழைத்து விசாரித்து வருகின்றனா். கடந்த இரண்டு நாள்களில் மட்டும் திருத்தணி பேருந்து நிலையத்தில் 7 கைப்பேசி பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதைத் தடுத்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
