திருவள்ளூா் அருகே அடுத்தடுத்து 2 கோயில்களில் பூட்டை உடைத்து திருட்டு
திருவள்ளூா் அருகே ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 2 கோயில்களின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் நகை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் அடுத்த செஞ்சிபானம்பாக்கம் கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் பூஜை முடித்து கோயிலை பூட்டி விட்டு பூசாரி வீட்டுக்குச் சென்றாராம். பின்னா் கோயிலை திறக்க செவ்வாய்க்கிழமை காலை வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பாா்த்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, அம்மன் கழுத்திலிருந்த 1 பவுன் தங்க தாலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், அதேபகுதியில் உள்ள முருகன் கோயிலில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
இது குறித்து கடம்பத்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், விரைந்து வந்த போலீஸாா் கோயிலில் அம்மன் கழுத்தில் கிடந்த தாலி நகை மற்றும் உண்டியல் பணம் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.
