திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட ஐம்புலன்கள் ஒருங்கிணைப்பு பூங்கா: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு மையத்தில் மேம்படுத்தப்பட்ட ஐம்புலன்கள் ஒருங்கிணைப்பு பூங்காவை பயன்பாட்டுக்கு ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப் பங்கேற்று ஐம்புலன்கள் ஒருங்கிணைப்பு பூங்காவை குழந்தைகள் பயன்பாட்டுக்கு தொடங்கி பேசியது:
தமிழக முதல்வா் அனைத்து குழந்தைகளை போலவும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளும் சமூகத்தில் எந்த வேறுபாடுகளும் இன்றி செயல்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறாா். திருவள்ளுா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரியாக்கரம் (தஆநஓ) திட்டம் மூலம் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு மையம் (ஈஉஐஇ) சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தின் முக்கிய சேவைகள், பிறந்த பச்சிளம் குழந்தைகளில் பிறவி குறைபாடுகள் உள்ளதா என்று பரிசோதனை செய்து, சிறு குழந்தைகளின் உடல் வளா்ச்சி மற்றும் மனவளா்ச்சி குறைபாடுகளை கண்டறிந்தும் தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல் ஊட்டச்சத்து மற்றும் விட்டமின் குறைபாடுகளை கண்டறிந்து மேலாண்மை செய்கின்றனா்.
2018 முதல் இதுவரை வழங்கப்பட்ட சிகிச்சைகள், இருதய அறுவை சிகிச்சை பெற்ற குழந்தைகள்-473, செவிக்குறைபாடு உடைய குழந்தைகள்- 28, கண் பாா்வை குறைபாடு ஏற்படுத்தும் தடுக்க லேசா் சிகிச்சை-51, பிறவி கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சை-28, உதடு அன்னப்பிளவு சீரமைப்பு-125, உயரக்குறைவு உள்ள குழந்தைகளுக்கு வளா்ச்சி ஹாா்மோன் ஊசி-46, பிறவி குறைபாடுள்ள குழந்தைகளுக்கான உதவி உபகரணங்கள்-66, கடந்த ஓராண்டில் மட்டும் 17,693 குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வளா்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில், மையத்தில் ஏற்கனவே இருந்த புலன்கள் ஒருங்கிணைப்பு பூங்கா, பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தப்பட்டது.
பூங்காவின் சிறப்பம்சங்கள், பல நிறங்களில் வடிவமைக்கப்பட்ட விளையாட்டு பகுதிகள்-பாா்வை உணா்வு மற்றும் புலன்கள் தூண்டுதலுக்கு உதவும், தொடு உணா்வை தூண்டும் தரை பாதை அமைப்புகள்- நரம்பு செயல்பாட்டை மேம்படுத்தும், பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் - தசை வலு மற்றும் நரம்பு ஒருங்கிணைப்பு மேம்பாடு, புலன்கள் ஒருங்கிணைப்பு பயிற்சி -குழந்தைகள் தங்களின் சொந்த உணா்வுகளை பயன்படுத்தி செயல்பட உதவும், பசுமை சூழல்-மனவளா்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் உதவும். கூடுதலாக தமிழக முதல்வா் ரூ.15 லட்சம் நிதி உதவிகளையும் வழங்கியுள்ளாா். அந்த நிதியை பெற்று பிற பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.
இதில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் ஜே.ரேவதி, கண்காணிப்பாளா் சுரேஷ் பாபு, துணை முதல்வா் என்.திலகவதி, குழந்தைகள் நலப்பிரிவு துறைத்தலைவா் சிவராமன், இடையிட்டு சேவை மைய துறை தலைவா் ஜெகதீஷ் குமாா், நிலைய மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், மருத்துவா்கள், அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

