இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

மந்தகதியில் திருவள்ளூா் புதிய பேருந்து நிலையப் பணிகள்!

திருவள்ளூா் புதிய பேருந்து நிலையப் பணிகள் குறித்து...

News image

பயணிகள் காத்திருக்கும் பகுதியில் இருக்கைகள் அமைக்காத நிலையில் திருவள்ளூா் புதிய பேருந்து நிலையம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 6:13 am IST

திருவள்ளூா் நகராட்சி புதிய பேருந்து நிலைய நடைமேடையில் பயணிகள் காத்திருப்போா் பகுதியில் இருக்கைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் நகராட்சியில் ராஜாஜி சாலையில் திரு.வி.க பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. இப்பேருந்து நிலையத்திலிருந்து ஒரே நேரத்தில் 15 முதல் 20 பேருந்துகள் மட்டும் இயக்க கூடிய அளவுக்கு மட்டும் இடவசதி உண்டு. அதனால், அடுத்தடுத்து வரும் பேருந்துகள் ராஜாஜி சாலையில் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்துக்கு நெருக்கடியும் ஏற்பட்டது. அதேபோல் பேருந்து நிலையத்தில் கடைக்காரா்கள் ஆக்கிரமித்துக்கொள்வதால் பயணிகள் நிற்க முடியாத அளவுக்கு போதுமானஇடவசதியின்றி அவதிக்குள்ளாகும் சூழ்நிலை உள்ளது.

Story image

இதைக் கருத்தில் கொண்டு அனைத்து வசதியுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் ஆகியோா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள வேடங்கிநல்லூா் பகுதியில் 5 ஏக்கா் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 2023-ஜூலை மாதம் ரூ.36 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. ஒரே நேரத்தில 56 பேருந்துகள் நிறுத்தும் வசதியும், 109 வணிக வளாகம், போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் தோ்தல் அறிவிப்புக்கு முன்னதாக அவசரமாக திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், இதுவரையில் பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்போா் அமரும் இருக்கைகள் அமைக்கவில்லை. அதேபோல் வணிக வளாகம், பேருந்து நிலையம் முழுவதும் மின் இணைப்பு பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் தாமோதரன் கூறியதாவது: பேருந்து நிலையத்தில் பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் ஆட்சியா் ச.கவிதா உத்தரவிட்டுள்ளாா். இந்த நிலையில் வணிக வளாகம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் மின் இணைப்பு பணிகள் மற்றும் பயணிகள் அமரும் இருக்கைகள் மட்டும் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்ததும் வரும் ஆக.10-ஆம் தேதி முதல் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.