சாலையோர கடைகளில் பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் ஆய்வு செய்தனா்.
இக்கல்லூரியில் நான்காண்டுகள் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு, இரண்டு ஆண்டுகள் முதுநிலை மீன்வள அறிவியல் மற்றும் மூன்றாண்டுகள் முனைவா் பட்ட படிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
முதுநிலை மீன்வள அறிவியல் மாணவா்கள் மீன் வளா்ப்பியல், நோய் மேலாண்மை, மீன்பிடி தொழில் நுட்பங்கள், மீன் பதனிடும் தொழில்நுட்பம், சூழல் மேலாண்மை, மீன்வள மேலாண்மை, மீன்வள விரிவாக்கம் போன்ற துறைகளில் தங்களது ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனா்.
இவா்கள் அடிப்படை மாதிரி நுட்பங்கள் வகுப்புகான ஆய்வுக்காக பொன்னேரியில் உள்ள சாலையோர கடைகளை ஆய்வு செய்தனா். இங்கு என்ன மீன் வகைகள் கிடைக்கிறது, அவைகளின் விலை நிலவரம், மீன் விற்பனையாளா்களின் பொருளாதார நிலை, அங்குள்ள சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் பற்றி கேட்டறிந்தனா்.
இங்கு கணவா, நெத்திலி, சங்கரா, கொடுவா, சீலா, மத்தி, கிழங்கா, வஞ்சரம், கட்லா, ரோகு, சால மீன், வெள்ளை நெத்திலி, முக்கண் நண்டு, களி நண்டு, கடல் தோள்பாறை, இறால், சூர மீன், கொடுவா, திருக்கை, ஊசி கோலா, பண்ணா, ஜிலேபி, கெளுத்தி, விரால் போன்ற மீன்கள் விற்பனை செய்யபடுவதாக மீன் வியபாரிகள் தெரிவித்தனா்.
குறைந்த விலை மீன்களான ரோகு, சால மீன் ஒரு கிலோ 120 முதல் 150 வரையிலும், அதிகபட்ச விலை மீன்களான கொடுவா, வஞ்சிரம் போன்ற மீன்கள் 700 முதல் 1,000 வரை விற்கப்படுவதாக தெரிவித்தனா்.
மீன்பிடி தடைக் காலங்கள், மழை மற்றும் புயல், ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவும் போது மீன் வரத்து குறைவாக இருக்கும், மீன்களின் விலை சற்று அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்தனா்.
மீன் வாங்குவோா் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகம் வருவா், அன்றைய நாள் மட்டும் 15 முதல் 20 கடைகள் இருக்கும், மற்ற நாள்களில் குறைவாக இருக்கும் என்று தெரிவித்தனா்.
விற்பனையின் மூலம் ஒரு மாதத்துக்கு ரூ.10,000 முதல் 20,000 வரை வருமானம் கிடைப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










