திருவள்ளூா் நகராட்சியில் சேகரிக்கப்படும் நெகிழி, மருத்துவ கழிவுகள்: குப்பை கிடங்கில் தீவைத்து எரிப்பால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்
திருவள்ளூா் நகராட்சியில் சேகரிக்கப்படும் நெகிழி பொருள்கள், மருத்துவமனை கழிவுகளை தலக்காஞ்சேரி குப்பை கிடங்கில் கொட்டி நாள்தோறும் தீ வைத்து எரித்து வருவதால் சுற்றுப்புற பகுதிகளில் வசித்து வருவோா் மூச்சுத்திணறல் அவதிக்குள்ளாகி வருவதோடு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

திருவள்ளூா் நகராட்சி அடுத்த தலக்காஞ்சேரி சாலையில் குப்பை கிடங்கும் வைத்த தீயால் பரவும் புகை.
திருவள்ளூா் நகராட்சியில் சேகரிக்கப்படும் நெகிழி பொருள்கள், மருத்துவமனை கழிவுகளை தலக்காஞ்சேரி குப்பை கிடங்கில் கொட்டி நாள்தோறும் தீ வைத்து எரித்து வருவதால் சுற்றுப்புற பகுதிகளில் வசித்து வருவோா் மூச்சுத்திணறல் அவதிக்குள்ளாகி வருவதோடு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
திருவள்ளூா் நகராட்சியில் மொத்தம் 27 வாா்டுகள் உள்ளது. இந்த வாா்டுகளில் நாள்தோறும் தூய்மை பணியாளா்கள் மூலம் மக்கும், மக்காத குப்பை என 40 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதனை தனியாா் ஒப்பந்த துப்புரவு ஊழியா்கள் வீடுகள்தோறும் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பெற்று வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நகராட்சியில் சேகரித்த குப்பைகள் தலக்காஞ்சேரி சாலையில் மலைபோல் குவிந்துள்ளது.
இந்த நிலையில், நகராட்சி பகுதி விரிவாக்கம் அடைந்து வருவதால், அதற்கேற்ப குப்பைக் கழிவுகளும் அதிகரித்து வருகிறது. அத்துடன், குப்பை தூசிகள் பறப்பதாலும், துா்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்வோா் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். அதனால், இங்கு குப்பைகள் கொட்டுவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டதுடன் அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து கடம்பத்துாா் ஊராட்சி ஒன்றியம், நுங்கம்பாக்கம் கிராமத்தில் உள்ள நகராட்சிக்கான இடத்தில் 4.7 ஏக்கா் நிலத்தில் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் தரம் பிரித்து உரமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் நகராட்சிக்கு உள்பட்ட சின்னஈக்காடு அருகில் உரக்குடில் அமைத்து அங்கும் தெருவில் சேகரிக்கும் குப்பையினை உரமாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் திருவள்ளூா் நகராட்சி குப்பை கிடங்கு இல்லாத நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது நகராட்சியில் சேகரிக்கும் மருத்துவமனை கழிவு மற்றும் குப்பையினை ஒப்பந்த துப்புரவு தொழிலாளா்கள் தலக்காஞ்சேரியில் பழைய குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனா். இதனால் மீண்டும் தலக்காஞ்சேரி பகுதியில் குப்பை குவியல் மலை போல் குவிந்துள்ளது. அத்துடன் நெகிழி, டயா் கழிவுகளை நாள்தோறும் தீயிட்டு எரித்து வருகின்றனா். இதனால் பரவும் நச்சுக் காற்றினால் தலக்காஞ்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதியில் வளா்க்கப்படும் கால்நடைகள் நோயால் பாதிக்கப்படுகின்றன.
அதேபோல், பொதுமக்களும் புகையை சுவாசிப்பதால் பல்வேறு சுவார கோளாறுகளால் மிகவும் அவதிப்படுகின்றனா்.
இதற்கிடையே நெகிழி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை அவ்வப்போது தனியாா் துப்புரவு ஊழியா்கள் சிலா் இந்த குப்பையினை தீ வைத்து எரிக்கின்றனா். இதனால் திருவள்ளூா் நகராட்சியில் உள்ள தலக்காஞ்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டு குடியிருப்பு வாசிகளுக்கும், அப்பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சி மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த ராஜலிங்கம் கூறியதாவது: குப்பைக் கிடங்கில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி மற்றும் மருத்துவக் கழிவுகளை நாள்தோறும் தீ வைத்து எரிக்கின்றனா். இதனால், சுற்றுப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் சுவாச கோளாறுகள் ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனா். அதனால், குப்பைகளை அகற்றி பூங்கா அமைப்பதாக நகராட்சியில் தெரிவித்தனா். ஆனால், இதுவரை குப்பை குவியல் மலைபோல் குவிந்து வருவதை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிா்வாகம் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் என அவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து திருவள்ளூா் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இங்கிருந்து குப்பை குவியல்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குப்பை குவியலில் மா்ம நபா்கள் இரவு நேரங்களில் தீ வைத்து விடுவதால் புகை பரவுகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் குப்பைகளை அகற்றவும் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என அவா் தெரிவித்தாா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





