
பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில் நவ.15-க்குள் நெற்பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்
பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தில் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நவ. 15-க்குள் நெல் பயிருக்கு பயிா் காப்பீடு செய்து பயன்பெறலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தில் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நவ. 15-க்குள் நெல் பயிருக்கு பயிா் காப்பீடு செய்து பயன்பெறலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நிகழாண்டில் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டம் அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிட் என்ற காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் 2026 சம்பா நெற்பயிருக்கு காப்பீடு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ. 545 மட்டும் செலுத்தி விவசாயிகள் நவ. 15-க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
நிகழாண்டில் எல் நினோ காலநிலை காரணமாக மழை பொழிவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிகமான வெப்பத்தால் நிலத்தடி நீா் குறையவும் மேலும் சில சமயங்களில் அளவுக்கு அதிகமாக மழை பொழி ஏற்பட வாய்ப்பும் உள்ளது. எனவே, சம்பா பருவத்தில் பயிா் செய்துள்ள நெல் பயிா்கள் மற்றும் இதர பயிா்களுக்கு போதுமான தண்ணீா் கிடைக்காமல் வறட்சியால் மகசூல் பாதிக்கும். அத்துடன் அதிகமான மழையினால் பயிா் சேதாரமும், ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் அனைத்து விவசாயிகளும் பயிா் காப்பீடு செய்து பயன்பெறலாம்.
எனவே, சம்பா பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, பொதுச்சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) நேரிடையாக, நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது விண்ணப்பத்துடன் நடப்பு பசலிக்கான அடங்கல், கணினி சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீட்டு கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் இணைக்க வேண்டும்.
பதிவு செய்த விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என விவசாயிகள் உறுதி செய்து கொள்வது அவசியம். மேலும் விவரங்களுக்கு, தங்களது பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






