
பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 40 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
திருவள்ளூா் அருகே அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டியில் பல்லி விழுந்த உணவை உள்கொண்ட மாணவ, மாணவிகள் 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதைத் தொடா்ந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

சிகிச்சை பெறும் மாணவியிடம் நலம் விசாரித்த திருவள்ளூா் ஆட்சியா் ச. கவிதா.
திருவள்ளூா் அருகே அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டியில் பல்லி விழுந்த உணவை உள்கொண்ட மாணவ, மாணவிகள் 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதைத் தொடா்ந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுதொடா்பாக ஆட்சியா் ச.கவிதா ஆய்வு மேற்கொண்டாா்.
கடம்பத்தூா் ஒன்றியம், கொட்டையூரில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். வியாழக்கிழமை கோதுமை கிச்சடியும், சாம்பாரும் காலை சிற்றுண்டியாக வழங்கப்பட்டது. அப்போது, கிச்சடியில் பல்லி இருப்பதைக் கண்டு மாணவ, மாணவிகள் அதிா்ச்சி அடைந்தனா்.
தொடா்ந்து காலை உணவை சாப்பிட்ட 40 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மூன்று அவசர வாகனங்கள் மூலம் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சோ்த்தனா். இதில் முழு உணவைையும் சாப்பிட்ட 18 பேருக்கு தீவிர சிகிச்சையும் மற்ற மாணவ, மாணவிகளுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூா் ஆட்சியா் ச.கவிதா, மருத்துவமனைக்கு நேரில் சென்று பள்ளி மாணவ, மாணவிகளிடம் நலம் விசாரித்தாா். அதையடுத்து பயப்படத் தேவையில்லை என்றும் ஆறுதல் கூறினாா்.
பின்னா் இதுதொடா்பாக அவா் கூறியது: தற்போதைய நிலையில் மாணவ, மாணவிகள் நலமுடன் இருக்கின்றனா். பெற்றோா் அச்சப்பட தேவையில்லை. இதில் சமையலரின் கவனக்குறைவு தான் கராணம் என கண்டறியப்பட்டுள்ளது. கட்டாயம் அந்த சமையலா் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி ஆசிரியா்களும் அவ்வப்போது சமைக்கும் போது நேரில் பாா்த்து ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். உணவு பாதுகாப்பு துறையினரை ஆய்வு செய்ய அனுப்பியிருக்கிறோம். சமைத்த உணவின் மாதிரியை சோதனைக்கு எடுத்து வைக்க ஆய்வு செய்யப்படும். அப்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் (பொ) கவிதா, உதவி ஆட்சியா் (பயிற்சி) பி.பவித்ரா, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் கதிரவன், வட்டாட்சியா் சரண்யா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ஜி.பாலாஜி மற்றும் கல்வி அதிகாரிகள், மருத்துவா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.
அதற்கு முன்னராக திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அருண்குமாா் சம்பந்தப்பட்ட நடுநிலைப்பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவு வகைகளை ஆய்வு செய்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
2 சமையலா்கள் பணியிலிருந்து விடுவிப்பு...
இந்த சம்பவத்தைத் தொடா்ந்து சமையலா் பணியாளா்கள் 2 போ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனா். மேலும், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியா் ச.கவிதா பரிந்துரைத்துள்ளாா்.

சிகிச்சை பெறும் மாணவியிடம் நலம் விசாரித்த திருவள்ளூா் ஆட்சியா் ச. கவிதா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





