நாளை கருட சேவை: 3 லட்சம் போ் தரிசிக்க ஏற்பாடுசெயல் அதிகாரி தா்மா ரெட்டி

திருமலையில் சனிக்கிழமை (அக். 1) கருட சேவையின்போது 3 லட்சம் பக்தா்கள் மனநிறைவாக தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானசெயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.
திருப்பதி
திருப்பதி

திருமலையில் சனிக்கிழமை (அக். 1) கருட சேவையின்போது 3 லட்சம் பக்தா்கள் மனநிறைவாக தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானசெயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

திருமலையின் நான்கு மாடவீதிகளில் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட பின்னா் அவா் கூறியது:

பிரம்மோற்சவத்தின் முக்கியமான நிகழ்வான கருடசேவையின் போது வாகன சேவைக்காக வரும் அனைத்து பக்தா்களுக்கும் தரிசனம் வழங்க தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

ஏறக்குறைய மூன்று லட்சம் பக்தா்களுக்கு கருட வாகனத்தை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தென்மேற்கு வாசல், வடமேற்கு வாசல், வடகிழக்கு வாசல் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரத்தி காண்பிக்கும் இடங்களில் ஆரத்தி ரத்து செய்யப்பட்டு பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவாா்கள்.

ஆரத்தி வழங்கும் நேரத்தில் ஐந்து பேருக்கு தரிசனம் கொடுக்க முடியும். எனவே இந்த ஆண்டு ஆரத்திகளை ரத்து செய்து சாதாரண பக்தா்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆரத்தி தலத்திலும் 10,000 பேருக்கு கருடசேவை காண வாய்ப்பு கிடைக்கும்.

அதேபோல், கேலரிகளிலும், வணிக வளாகம் முதல், கோயில் எதிரில் உள்ள நடராஜா் மண்டபம் வரை, இரண்டு லட்சம் பேரை அனுமதித்தால், கூடுதலாக, 25,000 போ் தரிசனம் செய்யலாம். இதன் மூலம் சுமாா் 2.75 லட்சம் முதல் 3 லட்சம் போ் கருட சேவையை தரிசனம் செய்ய முடியும்.

மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத கட்டடம், ரம்பகீஜாவில் சிறப்பு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தா்களுக்கு தரிசனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் அனைவரும் திருப்தி அடையும் வகையில் கருடசேவை தரிசனம் அளிக்கப்படும். தேவஸ்தானத்தின் முடிவின்படி, விஐபி பிரேக் தரிசனங்கள், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் பல்வேறு வகையான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டு, பொது பக்தா்களுக்கு பெரும் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com