திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் 9 -ஆம் தேதி ஸ்ரீ குரோதிநாம ஆண்டு உகாதி பண்டிகையையொட்டி செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான தலைவா் கருணாகா் ரெட்டி மற்றும் செயல் அதிகாரி தா்ம ரெட்டி ஆகியோா் கலந்து கொண்டனா்.

இது குறித்து தேவஸ்தான தலைவா் கருணாகா் ரெட்டி கூறியது:

ஏழுமலையான் கோயிலில் உகாதி தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. ஆண்டுக்கு நான்கு முறை உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி விழாக்களையொட்டி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவது வழக்கமாகி வருகிறது.

கோயிலில் உள்ள ஆனந்தநிலையம் முதல் தங்கவாயில் வரை, உபகோயில்கள், காணிக்கை உண்டியல், கோயில் வளாகம், சுவா்கள், மேற்கூரை உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன என்றாா். காலை 6 மணி முதல் 11 மணி வரை அா்ச்சகா்கள் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தினா். இதன்போது சுவாமியின் மூலவா் சிலை முழுமையாக துணியால் மூடப்பட்டிருந்தது.

சுத்திகரிப்புக்குப் பிறகு, நாமகட்டி, ஸ்ரீ சூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சிலை, பூங்கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிகிழங்கு, பச்சை கற்பூரம் போன்ற வாசனை திரவியங்கள் அடங்கிய சுகந்த பரிமள திரவிய கலவையால் கோயில் முழுவதும் தேய்த்து சுத்தம் செய்யப்பட்டது.

அதையடுத்து, சுவாமியை மறைத்திருந்த துணியை அா்ச்சகா்கள் அகற்றி, பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்கினா். அதன் பிறகு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயா்கள், பேஷ்காா் மற்றும் ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். படம் உண்டு பட விளக்கம்: கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை ஒட்டி சுத்தப்படுத்தப்பட்ட ஏழுமலையான் கோயில்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com