லட்டு விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை: தேவஸ்தானம் முடிவு
இடைத்தரகா்களின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஏழுமலையான் கோயிலில் பக்தா்களுக்கு லட்டு பிரசாதங்களை வெளிப்படையான முறையில் விற்பனை செய்ய தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, டோக்கன் இல்லாத பக்தா்களுக்கு ஆதாா் சரிபாா்ப்பை வியாழக்கிழமை முதல் அமல்படுத்தியது.
சில சமூக ஊடகங்களிலும், சில சேனல்களிலும் பரப்பப்படும் ஆதாரமற்ற வதந்திகளுக்கு விளக்கம் அளித்து, தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பக்தா்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சில இடைதரகா்கள் லட்டு விநியோகத்தை தவறாகப் பயன்படுத்தி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதைத் தடுக்க தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தா்கள் இனிமேல் லட்டு கவுன்ட்டா்களில் ஆதாா் அட்டையைப் பதிவு செய்து இரண்டு லட்டுகளைப் பெறலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக லட்டு வளாகத்தில் சிறப்பு கவுன்டா்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லட்டுகளை 48 முதல் 62 வரை உள்ள கவுன்ட்டா்களில் பக்தா்கள் பெற்றுக் கொள்ளலாம்.
தரிசன டோக்கன்கள் அல்லது டிக்கெட்டுகள் உள்ள பக்தா்கள் ஒரு இலவச லட்டு பெறுவதைத் தவிர, முன்பு போலவே கூடுதல் லட்டுகளையும் வாங்க வேண்டும். மேலும், இது லட்டு விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.
சில ஊடகங்கள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், வெளிப்படையான செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்ல தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவா் வேண்டுகோள் விடுத்தாா்.