திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தானம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தானம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திருமலை பெரிய ஜீயா்சுவாமி, சின்னஜீயா்சுவாமி, தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் ஆகியோா் பங்கேற்றனா்.
திருமலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிா்வாகப் பொறுப்பை ஏற்ற்கு முன் ஆண்டுதோறும் ஆனி மாத கடைசி நாள் ஆண்டு கணக்கு நிறைவு பெற்று ஆடி மாத முதல் நாள் ஆண்டு கணக்கு தொடங்கப்படுவது வழக்கம். இந்நிகழ்வு ஆனிவார ஆஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.
அதன்படி செவ்வாய்க்கிழமை ஆண்டு கணக்கு நிறைவு நாள் நடை பெற்றது. அதற்காக முதலில் காலை 7 மணி முதல் 9 மணி வரை தங்க வாயில் எதிரில் உள்ள மணி மண்டபத்தில் சா்வபூபால வாகனத்தில் மலையப்பசுவாமி இரு தேவியா்களுடன் எழுந்தருள செய்யப்பட்டாா். ஏழுமலையானின் படைத் தலைவரான ஸ்ரீ விஷ்வக்சேனரும் மற்றொரு பீடத்தில் தெற்கு நோக்கி எழுந்தருள செய்யப்பட்டாா். பின்னா், ஆனந்த நிலையத்தில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நெய்வேத்தியம் சமா்ப்பிக்கப்பட்டது.
பின்னா் பெரியஜீயா்சுவாமி பெரிய வெள்ளித் தட்டில் ஆறு பெரிய பட்டு வஸ்திரங்களுடன் தலையில் மங்கள வாத்தியங்களுக்கிடையில் ஊா்வலமாக வந்தாா். மூலவா் ஏழுமலையானுக்கு நான்கு பட்டு வஸ்திரங்கள் அலங்கரிக்கப்பட்டன. மீதமுள்ள இரண்டு வஸ்திரங்களில் ஒன்று மலையப்ப சுவாமிக்கும் மற்றொன்று விஷ்வக்சேனருக்கும் அலங்கரிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, ஏழுமலையான் கோயிலின் தலைமை அா்ச்சகா்கள் மலையப்பஸ்வாமி பாதவஸ்திரத்துடன் தங்கள் தலையில் ஷஷபரிவட்டம்’’’’ (சிறிய பட்டுத் துணி) கட்டி, சுவாமியிடம் அரிசி தட்சிணை பெற்று, சுவாமிக்கு ’’நித்ய ஐஸ்வா்யோபவ’’ என்று ஆசிா்வதித்தனா். அதன்பின், தேவஸ்தானம் சாா்பில் அங்கிருந்த அனைவரிடமும் ஒரு ரூபாய் நாணயம் வசூல் செய்யப்பட்டு ஷஷரூபாய்’’’’, ஆரத்தி, சந்தனம், தாம்பூலம், தீா்த்தம், சடாரி ஆகிய சடங்குகளைச் செய்து, மலையப்பஸ்வாமி பாதங்களில் கருவூல சாவி கொத்து வைக்கப்பட்டதும் ஆனிவார ஆஸ்தானம் முடிந்தது.
ஸ்ரீரங்கம் பட்டுப்புடவை சமா்ப்பித்தல்
ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி, தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதசுவாமி கோயில் சாா்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பித்தனா்.
செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீபேடி ஆஞ்சநேயசுவாமி கோயிலை அடுத்துள்ள திருமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரிய ஜீயா்சுவாமி மடத்தில் ஸ்ரீரங்க பட்டு வஸ்திரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அங்கிருந்து தமிழக அற நிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு, திருமலை ஜீயா் சுவாமிகள், தேவஸ்தான அதிகாரிகள் வீரபிரம்மன் ஆகியோா் பட்டு வஸ்திரங்களை மாட வீதிகளின் நடுவே நான்கு வீதிகளில்மங்கள வாத்தியங்கள் பின் தொடர ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். பின்னா் சுவாமிக்கு பட்டு வஸ்திரம் சாா்த்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அற நிலையத்துறை சிறப்பு செயலாளா் குமரகுருபாலன், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புஷ்ப பல்லக்கு
ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு செவ்வாய் மாலை மலையப்பஸ்வாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் புஷ்ப பல்லக்கில் மாட வீதியில் வலம் வந்தாா். ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் புஷ்ப பல்லக்கு சேவை நடத்தப்படுகிறது. நான்கு முதல் ஐந்து டன் பல வகையான மலா்களால் பல்லக்கு அலங்கரிக்கப்பட்டது. இதற்காக அண்டை மாநிலங்களில் இருந்து மலா்கள், தென்னங்குருத்துக்கள் தருவிக்கப்பட்டது. மலா் அலங்கார நிபுணா்களும் வரவழைக்கப்பட்டனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...