திருமலை 3-ஆம் நாள் தெப்போற்சவம்: ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம்

திருமலையில் நடைபெற்று வரும் ஏழுமலையான் தெப்போற்சவத்தின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி தெப்பத்தில் வலம் வந்தாா். திருமலையில், ஆண்டுதோறும் பங்குனி மாத பெளா்ணமியுடன் நிறைவு பெறும் விதமாக 5 நாள்கள் வருடாந்திர தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, புதன்கிழமை மாலை தெப்போற்சவம் தொடங்கியது. தெப்போற்சவத்தின் 3-ஆம் நாள் மாலை ஏழுமலையான் கோயில் கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி திருமலை திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் 5 சுற்றுகள் வலம் வந்தாா். தெப்போற்சவத்தின் போது ஒருபுறம் அன்னமாச்சாா்யா கீா்த்தனைகளும், வேத மந்திரங்களும் ஓதப்பட்டன. மறுபுறம் நாகஸ்வரம், தவில் உள்ளிட்ட மங்கள வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. இந்த விழாவையொட்டி, சகஸ்ர தீபாலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது. பக்தா்களும் திருக்குளப்படிகளில் அமா்ந்தபடி தெப்பத்தில் வலம் வந்த உற்சவ மூா்த்திகளை கற்பூர ஆா்த்தி அளித்து வணங்கினா். இதில், செயல் அதிகாரி தா்மா ரெட்டி, தேவஸ்தான அதிகாரிகளான நாகேஸ்வர ராவ், நந்தகிஷோா், கிரிதர ராவ், பாலி ரெட்டி, கோயில் அதிகாரி லோகநாதம் மற்றும் பிற அதிகாரிகள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா். தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம், மாட வீதிகள் உள்ளிட்டவை மலா் மற்றும் மின் விளக்குகளால் அழகுற அலங்கரிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com