பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருவண்ணாமலையில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி: விபத்து இழப்பீடு வழங்காததால் நடவடிக்கை

விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால், சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான 2 அரசுப் பேருந்துகள்

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:01 pm

DIN

விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால், சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான 2 அரசுப் பேருந்துகள் திருவண்ணாமலையில் வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.
செங்கத்தை அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தைச் சேர்ந்த மண்ணு என்பவரின் மகன் ராதா (55). அஞ்சல் துறை ஊழியரான இவர், கடந்த 2009 ஜனவரி 9 -ஆம் தேதி மேல்புழுதியூர் கிராமத்தில் இருந்து மண்மலை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராதா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, உரிய இழப்பீடு வழங்கக் கோரி, ராதாவின் மனைவி ஜெயா, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2009 -இல் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி டி.கே.ராமன், மனுதாரருக்கு ரூ.5.85 லட்சம் இழப்பீடு வழங்க சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு  உத்தரவிட்டார்.
இந்தத் தொகையை போக்குவரத்துக் கழகம் வழங்கவில்லை. எனவே, கடந்த 2015 -இல் மனுதாரர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 9 -ஆம் தேதி விசாரித்த நீதிபதி ஜி.மகிழேந்தி, மனுதாரருக்கு வட்டியுடன் சேர வேண்டிய ரூ.9.9 லட்சத்துக்காக, சேலம் கோட்ட அரசுப் பேருந்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு:  இதேபோன்று, திருவண்ணாமலையை அடுத்த இனாம்காரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் பாலசுப்பிரமணியம் (54). திருவண்ணாமலை, காந்தி நகரில் உள்ள கூட்டுறவு வங்கியில் உதவியாளராக வேலை செய்கிறார். இவர், கடந்த 2010 ஜனவரி 8 -ஆம் தேதி திருவண்ணாமலையில் இருந்து செங்கத்துக்கு சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணம் செய்தார்.
செங்கத்தை அடுத்த தானாமேடு பகுதியில் பேருந்து சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியம் உரிய இழப்பீடு வழங்கக் கோரி, திருவண்ணாமலை சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.1.5  லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இந்தத் தொகையை அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்கவில்லை. எனவே, கடந்த 2016 -இல் பாலசுப்பிரமணியம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 9-ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், மனுதாரருக்கு வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டிய ரூ. ஒரு லட்சத்து 87 ஆயிரம் இழப்பீட்டுத் தொகைக்காக சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டது.
2 பேருந்துகள் ஜப்தி: இதையடுத்து, ரூ.9.9 லட்சம் இழப்பீட்டுத் தொகைக்காக, ஒசூரில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த அரசுப் பேருந்தையும், ரூ.1.87 லட்சம் இழப்பீட்டுத் தொகைக்காக, தருமபுரியில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த மற்றொரு அரசுப் பேருந்தையும் நீதிமன்ற அமீனா வியாழக்கிழமை ஜப்தி செய்தார். ஜப்தி செய்யப்பட்ட இரு அரசுப் பேருந்துகளும் திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.