திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு திருவண்ணாமலை, மங்கலம் பகுதிகளில் புதன்கிழமை திமுக கூட்டணிக் கட்சியினர் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஏப்.5) முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு திமுக கூட்டணிக் கட்சியினர் பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகளிடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர்.
திருவண்ணாமலையில்...: திருவண்ணாமலை நகரின் முக்கியச் சாலைகளில் புதன்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டு திமுக கூட்டணியினர் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனர். முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், திமுக நகரச் செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் ஆகியோர் வியாபாரிகள், பொதுமக்களிடம் முழு அடைப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில், காங்கிரஸ் நகரத் தலைவர் என்.வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, திமுக நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி, வழக்குரைஞர் அ.அருள்குமரன், அனைத்து அமைப்பு சாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மங்கலத்தில்...: திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராம கடை வீதிகளில் கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி தலைமையிலான அனைத்துக் கட்சியினர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
இதில், திமுக துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.பி.அண்ணாமலை, மேற்கு ஒன்றியச் செயலாளர் பெ.சு.சரவணன், அவைத் தலைவர் ம.வே.கன்னி, காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் இரா.ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







