
அரசியல் கட்சியினர் ஊர்வலம்
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக உள்ளிட்ட
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் மெளன ஊர்வலம் நடத்தி, கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
திருவண்ணாமலை காமராஜர் சிலை எதிரில் இருந்து ஏராளமான திமுகவினரும், வியாபாரிகளும் மெளன ஊர்வலம் புறப்பட்டனர். திருமஞ்சன கோபுரத் தெரு, திருவூடல் தெரு, தேரடி தெரு வழியாக அண்ணா சிலை அருகே ஊர்வலம் நிறைவு பெற்றது.
பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த மு.கருணாநிதி படத்துக்கு திமுகவினரும், வியாபாரிகளும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளர் காலேஜ் கு.ரவி, அனைத்து அமைப்புசாரா தொழில் சங்கங்களின் மாவட்டத் தலைவர் ஏ.எ.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, திருவண்ணாமலை, வேங்கிக்கால், அடி அண்ணாமலை உள்பட பல்வேறு பகுதிகளில் கருணாநிதி படத்துக்கு அந்தந்த பகுதி இளைஞர்கள் மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
கம்யூனிஸ்ட் சார்பில்...:
திருவண்ணாமலை, முத்தம்மாள் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணாநிதி படத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சிவக்குமார், நிர்வாகிகள் எம்.வீரபத்திரன், எம்.பிரகலாதன், இரா.பாரி, எஸ். ஆனந்தன், எஸ்.ராமதாஸ், அன்பரசன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வேட்டவலத்தில்: வேட்டவலம் நகர திமுக சார்பில் நடைபெற்ற மெளன ஊர்வலத்துக்கு நகரச் செயலர் ப.முருகையன் தலைமை வகித்தார். உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் மணிகண்டன், திராவிடர் கழக நிர்வாகி பட்டாபிராமன், அமமுக நகரச் செயலர் செந்தில்குமரன், அதிமுக நகரச் செயலர் செல்வமணி, காங்கிரஸ் நிர்வாகி அன்பு உள்பட அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து படத்துடன் காந்தி சிலை பகுதியில் மெளன ஊர்வலம் நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூரில்...: கீழ்பென்னாத்தூர் நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு நகரச் செயலர் ச.க.அன்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கீழ்பென்னாத்தூர் அடுத்த மேக்களூர் கிராமம், கத்தாழம்பட்டு கூட்டுச்சாலையில் தேமுதிகவினர் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், கீழ்பென்னாத்தூர் ஒன்றிய தேமுதிக பொருளாளர் எம்.கே.குமார், ஊராட்சி செயலர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி: கருணாநிதி மறைவையொட்டி, வந்தவாசி, கீழ்க்கொடுங்காலூர், தெள்ளாறு, வடவணக்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் அவரது உருவப் படத்துக்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு சவரத் தொழிலாளர் நலச் சங்கம் உள்ளிட்டவை சார்பில், கருணாநிதியின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
செய்யாறு: திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவையொட்டி, செய்யாறு நகர திமுக சார்பில், காலை 10 மணியளவில் திருவோத்தூரில் இருந்து நகரச் செயலர் அ.மோகனவேல் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு சந்தைப் பகுதி, காந்தி சாலை வழியாக அண்ணா சிலை வரை சென்று அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல, நகரின் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
செங்கம், ஆரணி, போளூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மெளன ஊர்வலமும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






