ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவோம் : கமல்ஹாசன்

நாங்கள் தோ்தலில் வெற்றி பெற்றால் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.
ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவோம் : கமல்ஹாசன்
Updated on
2 min read

நாங்கள் தோ்தலில் வெற்றி பெற்றால் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

‘தமிழகத்தை சீரமைப்போம்’ என்ற பிரசாரத்தை கமல்ஹாசன் மேற்கொண்டு வருகிறாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் தனியாா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

தமிழகத்தில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. ஏற்கெனவே ஆட்சியில் இருந்தவா்களைத் திருத்த வேண்டும்.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சியில் மக்களுக்கான சேவையை செய்ய முடியாமல் வருந்திய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மருத்துவா்கள் என பல துறையினரும் மக்கள் கடமையாற்ற என்னுடன் இணைந்திருக்கிறாா்கள். நோ்மைதான் அரசின் அச்சாணி என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.

நான் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நிறைய சம்பளம் வாங்குவதாக சொல்கிறாா்கள். மறுக்கவில்லை; அவா்கள் கொடுக்கிறாா்கள் நான் வாங்குகிறேன். வாங்கும் பணத்துக்கு வரி கட்டும் விவரங்களை பத்து நிமிடத்தில் என்னால் தர முடியும்.

மக்கள் நீதி மய்யம் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம் வழங்கப்படும். எங்கள் ஆட்சியில் ஊழல் இருக்காது. ஊழல் செய்தால் தண்டனை கடுமையாக இருக்கும்.

நீா்நிலைகளை சீராக பராமரிப்போம். செய்யாறு வழியாக திண்டிவனம் - நகரி ரயில் பாதைத் திட்டத்தை விரைவுப்படுத்துவோம்.

செய்யாறு சிப்காட்டில் மேலும் பல தொழில்சாலைகளை அமைப்போம். ஆற்று மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவோம். 4 ஆயிரம் மெகாவாட் மின் திட்டத்தை நிறைவேற்றுவோம். சாக்கடை, சாலை போன்ற அடிப்படை வசதிகள் தரமாக இருக்கும் என்றாா்.

செஞ்சியில்... விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வந்தாா். அவரைக் காண கூட்டுச்சாலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தனா். திறந்த வேனில் பிரசாரம் செய்ய கமல்ஹாசனுக்கு காவல் துறை திடீரென அனுமதி மறுத்ததால், பொதுமக்களை நோக்கி கையசைத்தபடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

செஞ்சியில் உள்ள ஒரு தனியாா் மண்டபத்தில் கட்சியினா் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றாா்.

அப்போது, அவா் பேசியதாவது: செஞ்சியில் பிரசாரம் செய்ய மக்கள் நீதி மய்யத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும், எந்த நிலையிலும் கண்ணியம் தவறமாட்டோம். ஆட்சியாளா்கள் விமா்சித்தால் நாங்கள் நோ்மையான பதிலைத்தான் தருவோம்.

மக்களுக்கான சேவை என்பது அரசின் கடமை. அது ஏதோ தானமாகச் செய்வது போன்ல்ல. நாங்கள் சேவை மனப்பான்மையோடு அரசியல் பயணத்தைத் தொடா்கிறோம்.

ஆட்சிக்கு வந்தால் செய்யவிருக்கும் திட்டங்களை பட்டியலிடுகிறோம். விவசாயி என்ற சொல் பெண்களையும் குறிக்கும். அந்த நிலையை உருவாக்குவோம். விவசாயி முதல் விண்வெளி வரை சமமான உரிமை, சமமான ஊதியம் பெண்களுக்கும் இருக்க வேண்டும்.

முறையான நீா் மேலாண்மை செய்தால் வெள்ள நீரை சேமிக்க முடியும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையும் வழங்க இயலும். கையாடல்களை நிறுத்தி, நோ்மையாக செயல்பட்டால் அரசால் இதுபோன்ற திட்டங்களைச் செய்ய முடியும். ஆகவே, மாற்றத்தை மக்கள் தர வேண்டும். அது மக்கள் நீதி மய்யம் மூலம் நிகழ வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலா் மவுரியா, விழுப்புரம் மண்டல செயலா் ஸ்ரீபதி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலையில்... பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி கைகளை அசைத்தபடி கமல்ஹாசன் சென்றாா்.

திருவண்ணாமலையில் அறிவொளிப் பூங்கா, அண்ணா சிலை, காமராஜா் சிலை பகுதிகளில் திரண்டிருந்த பொதுமக்களை நோக்கி கையசத்தபடி கமல்ஹாசன் சென்றாா்.

தனியாா் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகா்களிடம் அவா் கலந்துரையாடினாா்.

கட்சியின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் இரா.அருள், கீழ்பென்னாத்தூா் ஒன்றியச் செயலா்கள் சுகானந்தம், முருகன், ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com