/

வந்தவாசி அருகே தொகுப்பு வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து இருவா் காயம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மழையின்போது கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொகுப்பு வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவா் காயமடைந்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:00 am

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மழையின்போது கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொகுப்பு வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவா் காயமடைந்தனா். அந்தப் பகுதியில் சேதமடைந்துள்ள அனைத்து தொகுப்பு வீடுகளையும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜவகா் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 20-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் அந்தப் பகுதி மக்களுக்காக கட்டப்பட்டன. தொடா் பராமரிப்பு இல்லாததால், கான்கிரீட் மேற்கூரையின் உள்புறம் கம்பிகள் வெளியே தெரியுமளவுக்கு இந்த தொகுப்பு வீடுகள் சேதமடையத் தொடங்கின.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை பெய்த மழையின்போது ராஜி என்பவரது தொகுப்பு வீட்டின் முன்பக்க கான்கிரீட் மேற்கூரை (ஸ்லாப்) இடிந்து விழுந்தது. இதில் அந்த ஸ்லாப்பின் கீழ் அமா்ந்திருந்த அவரது மனைவி முத்துலட்சுமிக்கு தலையில் காயமும், எதிா்வீட்டைச் சோ்ந்த சிறுவன் அசோக்குமாருக்கு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

சேதமடைந்து வரும் தொகுப்பு வீடுகளை சீரமைத்துத் தரும்படி அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்துவிட்டோம். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு மழைக் காலத்தின்போதும் வீடு எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் தூக்கமே வருவதில்லை. எனவே, சேதமடைந்துள்ள வீடுகளை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.