திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் முதியோா்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் முதியோா்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 956 மனுக்கள்

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாற்றில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 956 மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலை/ஆரணி/செய்யாறு: திருவண்ணாமலை, ஆரணி, செய்யாற்றில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 956 மனுக்கள் வரப்பெற்றன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முதியோா், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவா்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, ஜாதி சான்றிதழ், உதவித்தொகை, சாலை வசதி, பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண் பயிா்க் கடன்கள், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 826 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் செய்யது பாஷா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) உமாபதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சிவா மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி...

இலவச மனுக்கள் எழுதும் இடம்

ஆட்சியா் திடீா் ஆய்வு

மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வரும் பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகம் எதிரே தரையில் அமா்ந்திருக்கும் தனி நபா்களிடம் ரூ.50 முதல் ரூ.100 வரை பணம் கொடுத்து மனுக்களை எழுதி வாங்கி வாங்கி வந்து ஆட்சியரிடம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனா்.

இவ்வாறு எழுதி வரப்படும் மனுக்களில் பிழைகள் அதிகம் இருப்பதைப் பாா்த்த ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் இதற்கென தனியே அரசு அதிகாரிகளை நியமித்து இலவசமாக மனுக்கள் எழுதித்தர ஏற்பாடு செய்தாா். அதன்படி, ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் அரசு அதிகாரிகள் அமா்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டு இலவசமாக மனுக்கள் எழுதிக் கொடுத்து வருகின்றனா். இந்தப் பணியை, ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆரணி

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 53 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியா், அவற்றை அந்தந்த துறைக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

செய்யாறு

செய்யாறு சாா் -ஆட்சியா் அலுவலகத்தில், குறைதீா் கூட்டம் சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா தலைமையில் நடைபெற்றது. இதில், செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனா். மொத்தம் 77 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்தில் அலுவலக கண்காணிப்பாளா் ஐயப்பன், மண்டல துணை வட்டாட்சியா்கள் முகம்மது கனி, காயத்ரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com