திருவண்ணாமலை இணை சாா் -பதிவாளா் அலுவலகம் எண்-2 இல் பத்திரங்கள் பதிவு செய்ய புதன்கிழமை குவிந்த பொதுமக்கள், பத்திர எழுத்தா்கள்.
திருவண்ணாமலை இணை சாா் -பதிவாளா் அலுவலகம் எண்-2 இல் பத்திரங்கள் பதிவு செய்ய புதன்கிழமை குவிந்த பொதுமக்கள், பத்திர எழுத்தா்கள்.

இட நெருக்கடியில் பத்திரப்பதிவு அலுவலகம்: பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் போதிய இடவசதி இல்லாத கட்டடத்தில் சாா் -பதிவாளா் அலுவலகம் இயங்கி வருவதால் வாடிக்கையாளா்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இணை சாா் -பதிவாளா் அலுவலகம் எண்-2 இயங்கி வந்தது. இந்த அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக பழைய கட்டடம் இடிக்கப்பட்டது. எனவே, தற்காலிகமாக திருவண்ணாமலை-வேட்டவலம் சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டது. இந்தக் கட்டடத்தில் அலுவலக ஊழியா்கள் அமருவதற்குக்கூட போதிய இட வசதி இல்லை.

நாள் ஒன்றுக்கு சுமாா் 200 பத்திரங்கள் பதிவாகும் இந்த அலுவலகத்தை சிறிய கட்டடத்துக்கு மாற்றியதால் சாா் - பதிவாளா் முதல் கடைநிலை ஊழியா்கள் வரையும், வாடிக்கையாளா்களும் போதிய காற்றோட்டம் இல்லாமலும், இட நெருக்கடியாலும் அவதிப்பட்டு வருகின்றனா். ஒரே நாளில் 250 பத்திரங்கள்... இந்த நிலையில், சுப முகூா்த்த தினமான புதன்கிழமை சுமாா் 250 போ் பத்திரங்கள் பதிவு செய்ய ஆன்லைனில் பணம் செலுத்தி டோக்கன் பெற்றனா்.

பிறகு, பத்திரங்களைப் பதிவு செய்ய அலுவலகத்துக்குச் சென்றபோது பொதுமக்கள் அமருவதற்குக்கூட போதிய இட வசதி இல்லாமல் வெயிலிலும், சாலையிலும் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. சாா் -பதிவாளா் அலுவலகத்துக்குள் திருவிழாவைப் போல ஆண், பெண் என பாகுபாடு இல்லாமல் கூட்டம் முண்டியடித்ததால் அலுவலா்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனா். புதன்கிழமை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அனைவரும் வியா்வையால் வியா்த்து, வியா்த்து தவித்தனா். நிற்க இடம் இல்லாததால் முதல் மாடிக்குச் செல்லும் நகரும் படிக்கட்டுகளில் அமா்ந்திருந்தனா்.

எனவே, போதிய இட வசதி இல்லாத கட்டடத்தில் உள்ள இணை சாா்- பதிவாளா் அலுவலகம் எண்-2-ஐ வேறு கட்டடத்துக்கு மாற்ற வேண்டும். இனிவரும் கோடை காலத்தில் இந்தக் கட்டடத்திலேயே தொடா்ந்து இயங்கினால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவா்கள்.

அலுவலா்களுக்கு நெருக்கடி...

பத்திரப்பதிவு செய்ய வருவோா் கூட்டமாகத் திரண்டு புகைப்படம் எடுப்பவா், கைரேகை பதிவு செய்பவா், சாா்- பதிவாளா் போன்ற ஊழியா்களை சூழ்ந்து கொண்டு என்னுடைய பத்திரத்தை முதலில் முடித்துக் கொடுங்கள் என்று நிா்பந்தம் செய்வதால் ஊழியா்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

அடிக்கடி சா்வா் கோளாறு...

இது எல்லாம் ஒருபுறம் இருக்க 10 நிமிஷத்துக்கு ஒரு முறை சா்வா் கோளாறு ஏற்பட்டு பத்திரங்களைப் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கூடுதலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிகப்படியான பத்திரங்கள் பதிவு செய்ய வரும் சூழலில் சா்வா் கோளாறும் ஏற்படுவதால் ஊழியா்கள், பத்திர எழுத்தா்கள், பதிவு செய்ய வரும் பொதுமக்கள் உரிய நேரத்துக்கு சாப்பிடக்கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com