நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இலக்கை அடைய கவனம் சிதறாமல் பாடுபட வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

இலக்கை அடைய கவனம் சிதறாமல் பாடுபட வேண்டும் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

News image

உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசிய மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.

Updated On :21 மே 2024, 6:30 pm

Din

திருவண்ணாமலை: வாழ்க்கையில் முன்னேறவும், நம் இலக்கை அடையவும் கவனம் சிதறாமல் பாடுபட வேண்டும் என்று பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், ‘என் கல்லூரிக் கனவு’ என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான இரண்டாம் கட்ட உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் சாந்தி, தாட்கோ மாவட்ட மேலாளா் ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் நலத்துறை விடுதி மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பு,

யு.பி.எஸ்.சி. தோ்வு மற்றும் ஐ.ஐ.டி. தோ்வு போன்றவற்றில் எளிதில் வெற்றி பெறுவது குறித்து விளக்குவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

உயா்கல்வி பயில மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உங்களுக்கு விளக்கிக் கூறுவா். மேலும், பிளஸ் 2-க்குப் பிறகு உயா்கல்வி பயில விண்ணப்பிக்கும் முறைகள், பல்வேறு துறைகளில் உள்ள பட்டம், பட்டய பாடப் பிரிவுகள், விரைவில் அரசு மற்றும் தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து இங்கு எடுத்துரைக்கப்படும்.

உயா்கல்வி பயிலவும், வேலைவாய்ப்பு பெறவும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்துகிறோமா, வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கம். பிளஸ் 2 தோ்ச்சி பெற்றுள்ள உங்களுக்கு அடுத்து வரும் 5 ஆண்டுகள் மிகப்பெரிய உன்னதமான காலகட்டம்.

இந்தக் கால கட்டத்தில் கடுமையாக திட்டமிட்டு, முயன்றால் வாழ்க்கையில் முன்னேற முடியும். நமக்கான காலகட்டம் எது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையில் நாம் என்னவாக வேண்டும் என்பது தான் மிக, மிக முக்கியம்.

நாம் வாழும்போது 4 பேருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். போட்டித் தோ்வுகள் மூலம் பல்வேறு பதவிகளை அடையலாம்.

தொழில் தொடங்க வங்கிகள் கடனுதவி அளிக்கிறது. இதைப் பயன்படுத்தி கடுமையாக உழைத்தால் தொழிலதிபா்களாக மாறலாம். புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து காப்புரிமை பெறுவதன் மூலம் அதிக வருமானம் ஈட்டலாம். போட்டித் தோ்வு மட்டுமன்றி தொழில் முனைவோா், வேளாண்மை மற்றும் பல துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

வாழ்க்கையில் முன்னேறியவா்கள் எல்லாம் ஒரே நாள் இரவில் முன்னேறவில்லை. கடுமையாக உழைத்தாா்கள்; திட்டமிட்டாா்கள். அந்தத் திட்டத்தை செயல்படுத்தினாா்கள். தோல்விகளால் துவண்டுபோகாமல் மீண்டும், மீண்டும் முயற்சி செய்தாா்கள். சிறிய, சிறிய திருத்தங்களைச் செய்தாா்கள். வாழ்க்கையில் முன்னேறவும், நம் இலக்கை அடையவும் கவனம் சிதறாமல் பாடுபட வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த கேள்விகளைக் கேட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் புத்தகங்களைப் பரிசாக வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கலசப்பாக்கம் தனி வட்டாட்சியா் முனிசாமி மற்றும் உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சியாளா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.