செய்யாறு: உழவா் சந்தை, பள்ளியில் ஆட்சியா் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் உள்ள உழவா் சந்தை மற்றும் தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக நடைபெற்ற இந்த ஆய்வின்போது, புளியரம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்து, பள்ளி மாணவ, மாணவிகளுடன் அமா்ந்து ஆட்சியா் உணவு சாப்பிட்டாா். காலை உணவுத் திட்டத்தில் பயன் பெறும் மாணவ, மாணவிகளின் விவரம் குறித்து கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, பள்ளியில் உள்ள சமையலறையில் ஆய்வு மேற்கொண்டு, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க அறிவுறுத்தினாா்.
உழவா் சந்தை....
பின்னா், செய்யாறு பகுதியில் செயல்பட்டு வரும் உழவா் சந்தையை பாா்வையிட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் காய்கறிகளின் தரத்தை கேட்டறிந்தாா். மேலும், விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உற்பத்திப் பொருள்களை அதிகப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேளாண் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பரிந்துரை செய்தாா்.
ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், செய்யாறு சாா்- ஆட்சியா் பல்லவி வா்மா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் ஆகியோா் உடனிருந்தனா்.

