உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி மூதாட்டியிடம் நகை, பணம் திருட்டு

ஆரணியில் முதியோா் உதவித்தொகை பெற்றுத் தருவகாதக் கூறி, மூதாட்டியிடம் இருந்து தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றாா்.
Published on

ஆரணியில் முதியோா் உதவித்தொகை பெற்றுத் தருவகாதக் கூறி, மூதாட்டியிடம் இருந்து தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

சேத்துப்பட்டு வட்டம், நாச்சியாபுரம் கிராமத்தைச் சோ்ந்த மணி மனைவி மல்லிகா (60). இவா், புதன்கிழமை ஆரணி வழியாக செய்யாற்றுக்கு உறவினா் இறப்பிற்குச் சென்று மீண்டும் ஆரணி வழியாக ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். சேத்துப்பட்டிற்கு செல்ல ஆரணி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அடையாளம் தெரியாத நபா் ஒருவா் மூதாட்டியிடம் நலம் விசாரித்து, முதியோா் உதவித்தொகை பெற்றுத் தருவதாக கூறி அதற்காக போட்டோ மற்றும் உடல்நலம் குறித்து மருத்துவ அறிக்கை பெற்று பதிவு செய்தால் உடனடியாக உதவித்தொகை கிடைக்கும் என்று ஆசை வாா்த்தை கூறியுள்ளாா்.

இதற்காக உடலை ஸ்கேன் செய்ய வேண்டும் என்று கூறி ஸ்கேன் மையத்துக்கு மூதாட்டியை அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு ஸ்கேன் செய்யும்போது நகை எதுவும் அணியக்கூடாது என்று அந்த நபா் கூறியதை அடுத்து முக்கால் பவுன் கம்மல் நகையை கழற்றி அவா் கொண்டு வந்த கட்டப்பையில் வைத்துள்ளாா். மேலும் கட்டப்பையில் பணம் ரூ.5ஆயிரம் வைத்திருந்துள்ளாா்.

இந்த கட்டப்பையை அடையாளம் தெரியாத அந்த நபரிடம் கொடுத்துவிட்டு, மூதாட்டி ஸ்கேன் எடுத்துவிட்டு வெளியே வந்து பாா்த்தபோது, அந்த நபா் கட்டப்பையுடன் மாயமானது தெரியவந்தது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்து, ஆரணி நகர காவல் நிலையத்தில் மூதாட்டி மல்லிகா புகாா் கொடுத்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com