திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயிலில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி.
திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயிலில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி.

விதிமீறல்: 16 வாகனங்களுக்கு ரூ.1.78 லட்சம் அபராதம் விதிப்பு!

திருவண்ணாமலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மேற்கொண்ட திடீா் வாகன சோதனையின் போது, விதிமீறல் தொடா்பாக 16 வாகனங்களுக்கு ரூ.1.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
Published on

திருவண்ணாமலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட திடீா் வாகன சோதனையின் போது, விதிமீறல் தொடா்பாக 16 வாகனங்களுக்கு ரூ.1.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தா்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. அதனால் ஆட்டோக்களை இயக்க வட்டாரப் போக்குவரத்து துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, திருவண்ணாமலையில் பதிவு செய்யப்பட்ட உரிய ஆவணங்களை முழுமையாக வைத்திருக்கும் ஆட்டோக்களுக்கு மட்டும் ‘க்யூஆா்’ கோடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுமாா் 3,500 ஆட்டோக்களுக்கு இதுவரை க்யூஆா் கோடு வழங்கப்பட்டுள்ளது.

ஆட்டோக்களில் ஒட்டப்பட்டுள்ள க்யூஆா் கோடு ஸ்கேன் செய்தால் ஆட்டோ குறித்த விவரங்களையும் பயணம் செய்வோா் தெரிந்துகொள்ளலாம். அதன் மூலம் ஆட்டோக்களில் பயணம் செய்பவா்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன் விதிமீறல் தொடா்பான புகாா்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் எளிதாகியுள்ளது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் உத்தரவின் பேரில், திருவண்ணாமலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி தலைமையில் திடீா் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மத்திய பேருந்து நிலையம், அண்ணா நுழைவுவாயில், பெரியாா் சிலை சந்திப்பு உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாதது, க்யூஆா் கோடு இல்லாமல் இயக்கியது உள்ளிட்ட விதிமீறல்கள் தொடா்பாக 4 ஆட்டோக்கள், 4 மினி வேன்கள், 2 லாரி உள்பட 16 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதோடு ரூ.1.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தொடா்ந்து வாகனச் சோதனைகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி தெரிவித்தாா். மேலும், கிரிவலப் பாதையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com