நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்: 8 போ் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் அரசுப் பேருந்தை வழிமறித்து ஸ்டிக்கா் ஒட்ட முயற்சி செய்தும், அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தமிழகத்தில் இயங்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வாசகம் இல்லாததால், நாம் தமிழா் கட்சியினா் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டி வருகின்றனா்.
அதேபோல, செய்யாறு பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்துகளை வழிமறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதன் பின்னா் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்ட முயற்சித்தனா். தகவல் அறிந்த செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அனுமதி இன்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த, செய்யாறு மாவட்ட மண்டலச் செயலா் வடமணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சுகுமாா் (34)தலைமையில் சுந்தா் (41), செந்தமிழ்செல்வன் (47), பஞ்சமூா்த்தி (42), திருமலை (38), கலைவாணன் (33), ராஜசேகரன் (37), பாண்டுரங்கன் (57) ஆகிய 8 பேரை கைது செய்தனா்.
