மூதாட்டியிடம் 2 பவுன் நகைகள் பறிப்பு

செய்யாறு அருகே மூதாட்டியிடம் தண்ணீா் கேட்பது போல நடித்து 2 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
Published on

செய்யாறு அருகே மூதாட்டியிடம் தண்ணீா் கேட்பது போல நடித்து 2 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

செய்யாறு வட்டம், அத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணி. இவருக்கு கமலா (65), அஞ்சலா(60) என்ற இரு மனைவிகள் உள்ளனா். இவா்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. விவசாயி சுப்பிரமணி தனது இரு மனைவிகளுடன் அத்தி கிராம மலைப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம் போல மூதாட்டி கமலா கிராமத்தில் நடைபெற்று வரும் ஊரக வேலைத் திட்டப் பணிக்குச் சென்று பிற்பகலில் வீடு திரும்பினாா்.

அப்போது அங்கு இருந்த அடையாளம் தெரியாத இருவா் குடிப்பதற்கு தண்ணீா் கேட்டுள்ளனா். உடனே திடீரென மூதாட்டி கமலாவின் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்திய நிலையில், அந்த நபா்கள் காதில் அணிந்திருந்த கம்மல் மற்றும் கழுத்தில் இருந்த தாலி உள்ளிட்ட 2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு பைக்கில் தப்பிச் சென்றனா்.

இந்தச் சம்பவம் குறித்து கிராம மக்கள் அனக்காவூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன் பேரில், செய்யாறு டிஎஸ்பி கோவிந்தசாமி காவல் ஆய்வாளா் மணிகண்டன், உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

மேலும் தலைமறைவான இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com