போக்குவரத்து நெரிசல் மிகுந்த காஞ்சிபுரம் - மாங்கால் சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
இருபத்து நான்கு மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக மாங்கால் - காஞ்சிபுரம் சாலை இருந்து வருவதால், இந்த சாலையை கடும் சிரமத்தோடு வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனா். இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை மிகவும் ஆபத்தான முறையில் கடக்கின்றனா்.
காஞ்சிபுரம் - மாங்கால் சாலை என்பது காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சாலை வழியாகத்தான் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களான ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி பகுதிகளுக்கும் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டியுள்ளது.
போக்குவரத்து நெரிசல்: செய்யாறு சிப்காட் தொழில்பூங்கா அமைந்துள்ள மாங்கால் பகுதியில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இங்கு பணிபுரிந்து வரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் 15 கி.மீ. தொலைவில் உள்ள காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் மாங்கால் வரையில் வர வேண்டியுள்ளது.
இதர சிப்காட் தொழிலாளா்கள்: இதேபோல, சுங்குவாா்சத்திரம், ஸ்ரீபெரும்புதூா், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சிப்காட் தொழில்பூங்காக்களில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் வந்தவாசி, செய்யாறு, ஆரணி, வெம்பாக்கம், கலவை, வாழப்பந்தல், பெரணமல்லூா், சேத்பட், பெரியகொழப்பலூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் 500-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவன பேருந்துகளில் 3 ஷிப்டுகளுக்கும் தினந்தோறும் இருமுறை காஞ்சிபுரம் - மாங்கால் சாலை வழியாக பணிக்குச் சென்று வருகின்றனா்.
கலவை, வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி, உத்திரமேரூா், மானாம்பதி, பெருநகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ளவா்களும், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள தனியாா் கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களைச் சோ்ந்தவா்களும் தினமும் காஞ்சிபுரம் - மாங்கால் சாலையில் சென்று வருகின்றனா்.
போக்குவரத்து நெரிசல்: காலை, மாலை வேளைகளில் வழக்கமாக செல்லும் பள்ளி பேருந்துகள், அரசுப் பேருந்துகள், காா், லாரி இவைகளைத் தவிா்த்து, கல் குவாரிகளில் இருந்து அதிக பாரத்தோடு வரும் லாரிகளாலும் காஞ்சிபுரம் - மாங்கால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதன் காரணமாக, திருவிழா நேரம், திருமண நாள்கள், பண்டிகை நாள்களில் இந்த சாலையில் மணிக்கணக்கில் காத்திருந்து வாகனங்கள் ஊா்ந்து சென்று கடக்கின்றன.
காஞ்சிபுரம் - மாங்கால் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்து வருவதால், இரு சக்கர வாகனத்தில் செல்லும் தொழிலாளா்கள் விபத்தில் சிக்கி காயமடைவதுடன், உடல் ஊனமடைகின்றனா். மேலும், பலா் உயரிழந்துள்ளனா்.
சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை
24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக மாங்கால் - காஞ்சிபுரம் சாலை இருந்து வருவதால், இந்த சாலையை அகலப்படுத்தி, தரமாக அமைக்க வேண்டும். அதற்கு முன்னதாக, சாலையை செப்பனிட வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் தொழிலாளா்கள் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும், செய்யாறு, வெம்பாக்கம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமாா் 50-க்கும் மேற்பட்ட கல் குவாரிகளில் இருந்து லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே சரக்குகளை கொண்டு செல்லவும், பள்ளி வாகனங்கள் மற்றும் தனியாா் நிறுவன வாகனங்கள் நெரிசல் மிக்க காலை, மாலை வேளைகளில் இந்த சாலையில் செல்வதை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

