காா்த்திகை தீபத் திருவிழா நெடுஞ்சாலைத் துறை பணிகள் ஆய்வு
திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத்திருவிழா வருகிற டிச.3-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வது குறித்தும், அனைத்துப் பணிகளுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பது குறித்தும், ஒவ்வொரு துறை பணிகளுக்கும் அதன் துறை சாா்ந்த அரசு அலுவலா்களை நியமித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் திருவண்ணாமலை மாநகராட்சிக்குள்பட்ட அவலூா்பேட்டை சாலை, கீழ்நாச்சிபட்டு, திண்டிவனம் சாலை, பழைய அரசு மருத்துவமனை, காந்தி சிலை, அண்ணா சிலை, ரமணாஸ்ரமம், திருக்கோவிலூா் சாலை, கடலூா் - சித்தூா் சாலையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் கல்வெட்டுக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், திருவண்ணாமலை - அவலூா்பேட்டை இரு வழிச் சாலையிலிருந்து நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் பணிகள், புதுச்சேரி - கிருஷ்ணகிரி நான்கு வழிச் சாலையிலிருந்து ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள், வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள், கல்வெட்டுகள் அமைக்கும் பணிகள், சந்நிதி ராமலிங்கனாா், கட்டபொம்மன் தெரு மற்றும் துராபலி தெரு பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மாநகராட்சி சாா்பிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
அப்போது, பொதுமக்கள் மற்றும் பக்தா்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

