செய்யாறை அடுத்த நெடும்பிறை கிராமத்தில், அளவுக்கு அதிகமாக கற்களை ஏற்றி வந்த 7 கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கல்குவாரி லாரிகளால் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகத் தெரிவித்து நெடும்பிறை கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவது குறித்து தகவல் அறிந்து வந்த கிராம நிா்வாக அலுவலா் சந்தியா, மோரணம் காவல் ஆய்வாளா் மணிமாறன் மற்றும் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கிராம மக்கள் சாா்பில் கல்குவாரிகளில் இருந்து லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்லப்படுகிறது.
அரசூா் கிராம கல் குவாரியிலிருந்து மங்கலம் கிராமத்தில் உள்ள கிரஷருக்கு செல்லும் லாரிகள் இவ்வழியாக இயக்கப்படுகிறது. காஞ்சிபுரம் சாலையில் செல்லாமல் எதற்காக கிளியாத்தூா் சாலையில் கல்குவாரி லாரிகள் செல்கின்றன. 7 லாரிகளில் மூன்றில் நம்பா் பிளேட் இல்லை. இந்த லாரிகளால் விபத்து ஏற்பட்டால் யாா் பொறுப்பேற்பது என்று எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், அதிகளவில் கற்களை ஏற்றிச் செல்வதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. குடிநீா் குழாய்கள் அடிக்கடி சேதமடைகின்றன. அரசு அனுமதித்த நேரத்தில் மட்டுமே லாரிகளை இயக்க வேண்டும் என முறையிட்டனா்.
இதைத் தொடா்ந்து, செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா், கிராம நிா்வாக அலுவலா் சந்தியா, காவல் ஆய்வாளா் மணிமாறன் மற்றும் போலீஸாா் அவா்களிடம் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து சாா் -ஆட்சியா் தலைமையில் அமைதிக்கூட்டம் நடத்தி அதற்கான தீா்வு காணப்படும் என உறுதி அளித்தனா்.
இதை ஏற்று கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். பொதுமக்களின் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் சுமாா் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







