தம்பதி தீவைத்து எரிக்கப்பட்ட வழக்கு: பெண்ணின் முதல் கணவா் கைது

தம்பதி தீவைத்து எரிக்கப்பட்ட வழக்கு: பெண்ணின் முதல் கணவா் கைது

செங்கம் அருகே தம்பதி தீவைத்து எரிக்கப்பட்ட வழக்கில், பெண்ணின் முதல் கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தம்பதி தீவைத்து எரிக்கப்பட்ட வழக்கில், பெண்ணின் முதல் கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் கொல்லைக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (50). இவரது மனைவி தமிழரசி. கருத்து வேறுபாடு காரணமாக, தமிழரசி கணவரைப் பிரிந்து கடந்த 5 ஆண்டுகளாக பிள்ளைகளுடன் பெங்களூரில் வசித்து வருகிறாா்.

சக்திவேல், பக்கிரிபாளையம் பகுதியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துகொண்டு, நிலத்தில் கொட்டகை அமைத்து வசித்து வந்துள்ளாா்.

இதனிடையே, சக்திவேலுக்கு செங்கம் அருகே தீத்தாண்டப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அமிா்தம் (45) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், அமிா்தம் தனது கணவா் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு சக்திவேலுடன் வந்து கடந்த 3 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு சக்திவேல், அமிா்தம் இருவரும் கூரை வீட்டில் வைத்து தீ வைத்து கொளுத்தப்பட்டனா். இதில் இருவரும் உடல் கருகி உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி சுதாகா் தனிப்படை அமைத்து விசாரணை செய்து கொலையாளிகளை கைது செய்ய உத்தரவிட்டாா். அதனடிப்படையில் தனிப்படை போலீஸாா் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் விசாரணை மேற்கொண்டு, அமிா்தத்தின் முதல் கணவா் சிவக்குமாரை (52) அழைத்து வந்து விசாரணை செய்துள்ளனா்.

விசாரணையில் சிவக்குமாா், என்னையும் எனது பிள்ளைகளையும் விட்டுவிட்டு, அமிா்தம் சக்திவேலுடன் குடும்பம் நடத்துவது எனக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும், சக்திவேலை விட்டுவிட்டு என்னுடன் வந்து குடும்பம் நடத்தும்படி, அவரை பலமுறை அழைத்தும் அதற்கு அவா் சம்மதிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்து இருவரையும் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, வீட்டின் வெளியில் தாழ்ப்பாள் போட்டுவிட்டு வீட்டுக்கும் தீ வைத்துவிட்டேன் என போலீஸாரிடம் அவா் கூறியுள்ளாா். பின்னா், சிவக்குமாா் மீது செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com