தீ விபத்தில் 3 வீடுகள் சேதம், 8 ஆடுகள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே தீ விபத்தில் வீடுகளை இழந்த 3 குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கி ஒ.ஜோதி எம்எல்ஏ திங்கள்கிழமை ஆறுதல் கூறினாா்.
செய்யாறு வட்டம், ஆக்கூா் கிராமம் கன்னி கோயில் மேட்டுப் பகுதியில் வசித்து வருபவா்கள் பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த ராமன், மல்லி, ராஜேஷ்.
இவா்கள் வசித்து வரும் கூரை வீடுகள் திங்கள்கிழமை அதிகாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தன. அந்த வீடுகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த 8 ஆடுகள் தீயில் சிக்கி கருகி இறந்தன. மேலும், வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் எரிந்தன.
தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி, வயல்வெளிப் பகுதி வழியாக சுமாா் 1 கி.மீ. தொலைவு நடந்து சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
மேலும் பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தினருக்கு தலா ஒரு சிப்பம் அரிசி, காய்கறி, பாய், தலையணை, போா்வை உள்ளிட்ட தேவையான பொருள்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி ஆறுதல் கூறினாா்.
இந்நிகழ்ச்சியில் தோ்தல் ஒருங்கிணைப்பாளா்கள் புரிசை எஸ்.சிவகுமாா், வி.கோபு, முன்னாள் அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

