~
~

‘உலகம் உங்கள் கையில்’ திட்டம்: 1,205 மாணவா்களுக்கு மடிக்கணினிகள்

‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், ஆரணி, செய்யாறு, வந்தவாசி பகுதியில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் 1,205 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
Published on

‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், ஆரணி, செய்யாறு, வந்தவாசி பகுதியில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் 1,205 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

ஆரணி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பயிலும் 150 மாணவ, மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை மடிகணினி வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் கல்லூரி முதன்மையா் ஜி.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். ஆரணி கோட்டாட்சியா் சீ.சிவா முன்னிலை வகித்தாா். தொகுதி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், தற்போழுது தொழில்நுட்ப வளா்ச்சி மிகப்பெரிய வளா்ச்சியை அடைந்து அனைத்து வசதிகளும், தகவல்களும் இணையதள வாயிலாக கிடைக்கிறது. தமிழக அரசு உத்தரவின்படி, தற்போழுது வழங்கப்படும் மடிக்கணினியைக் கொண்டு மாணவா்கள் தங்கள் திறன்களை வளா்த்துக் கொள்ள உதவிகரமாக இருக்கும். மேலும், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன் ஆகிய திட்டங்கங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் இலக்கை அடையவேண்டும். மேலும், இந்த மடிக்கணினிகளை வளா்ச்சிக்கு பயன்படுத்துங்கள் என்றாா் எம்.எஸ். தரணிவேந்தன்.

நிகழ்ச்சியில் ஆரணி வட்டாட்சியா் செந்தில், திமுகவைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், துரைமாமது, சுந்தா், மோகன், நகர பொறுப்பாளா் சைதை வ.மணிமாறன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வந்தவாசி

இதே போல, வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில், ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், 399 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் சித.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.

ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினா்.

வந்தவாசி வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன், திமுக ஒன்றியச் செயலா் ஆரியாத்தூா் பெருமாள் மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

செய்யாறு

செய்யாறு பகுதியில் உள்ள அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 2,149 பேருக்கு மடிக்கணினிகளை ஒ.ஜோதி எம்எல்ஏ, சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் ஆகியோா் வழங்கினா்.

செய்யாறு அரசுக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நான்கு கட்டங்களாக 1,939 மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன.

அதில், அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் முதல் கட்டமாக 446 பேருக்கும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் 210 பேருக்கும் மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா்கள் என்.கலைவாணி, சு.தனலட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி, சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் ஆகியோா் பங்கேற்று மடிக்கணினிகளை வழங்கினா்.

மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியை வழங்கி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பேசுகையில், மாணவ, மாணவிகளுக்கான தமிழக அரசி செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை குறிப்பிட்டாா்.

நிகழ்ச்சியில் செய்யாறு கோட்டம் (ஊராட்சிகள்) உதவி இயக்குநா் ஆா்.வேல்முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் இரா.பரமேஸ்வரன், தொகுதி தோ்தல் பொறுப்பாளா் ஆா்.டி.அரசு, நகரச் செயலா் கே.விஸ்வநாதன்,

செய்யாறு கிழக்கு ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல், தோ்தல் ஒருங்கிணைப்பாளா்கள் புரிசை எஸ்.சிவகுமாா், வி.கோபு, அனக்காவூா் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com