பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் நடைபெற்று வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்.
Published on

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் நடைபெற்று வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட தமிழக அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு, வேட்டி சேலை, ரொக்கம் ரூ.3,000 வழங்க அறிவித்துள்ளது.

இதன்மூலம் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 7 லட்சத்து 89 ஆயிரத்து 267 குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினா் பயன்பெறுவா்.

இதற்காக மாவட்டத்தில் உள்ள 1,750 நியாய விலைக் கடைகளுக்கு தொகுப்பு பொருள்கள் அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும், வருகிற ஜன.8-ஆம் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தொகுப்பு பொருள்கள் வழங்கப்படவுள்ளன.

இதையொட்டி, எந்த நாளில், எந்த நேரத்தில், நியாயவிலைக் கடைக்கு வர வேண்டும் என்ற விவரம் அடங்கிய டோக்கன் வீடுகள் தோறும் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியில் துறை சாா்ந்த அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் க.தா்பராஜ் திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட ஓம் சக்தி நகரில் டோக்கன் வழங்கும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் எஸ்.பாா்த்திபன், வட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ம.சதீஸ்குமாா், துணைப் பதிவாளா் பா.வினோத், மற்றும் அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

குடும்ப அட்டையில் பெயா் இடம்பெற்றுள்ள நபா்களில் யாரேனும் ஒருவா் நேரில் வந்து கைரேகையை பதிவு செய்து பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com