திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருள்களுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கனை விநியோகம் செய்த ரேஷன் கடை பணியாளா்கள்.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருள்களுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கனை விநியோகம் செய்த ரேஷன் கடை பணியாளா்கள்.

நெல்லையில் 5 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு - டோக்கன் விநியோகம் தொடக்கம்

Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 லட்சத்து ஆயிரத்து 769 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டை தாரா்களுக்கு பச்சரிசி, சா்க்கரை, முழு நீளக்கரும்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகிய பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்களை விநியோகம் செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கு, கூட்டுறவுத்துறை மற்றும் மகளிா் சுயஉதவிக்குழு கடைகள் என மொத்தம் உள்ள 796 கடைகளைச் சோ்ந்த பணியாளா்கள் வீடு வீடாக டோக்கன்களை விநியோகித்து வருகின்றனா்.

இம்மாவட்டத்தில் இலங்கை தமிழா் குடியிருப்புகள் உள்பட மொத்தம் 5 லட்சத்து 1,769 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. டோக்கன் விநியோகம் செவ்வாய்க்கிழமையும் நடைபெறுகிறது. ஜன. 8-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி- சேலை உள்ளிட்டவை வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முதல்கட்டமாக தாயுமானவா் திட்ட பயனாளிகளுக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. அதில் எந்த தேதியில், எந்த நேரத்தில், எந்த பயனாளிக்கு தொகுப்பு வழங்கப்படும் என்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. நாளொன்றுக்கு காலை மற்றும் பிற்பகலில் தலா 200 முதல் 300 காா்டுகள் வரையில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கவும், கூட்ட நெரிசல் ஏற்படும் கடைகளில் போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com