மாற்றுத்திறனாளிகள் சட்ட நகல் கிழித்தெறியும் போராட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி, திட்டத்துக்கான நிதியைக் குறைத்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, போளூா் ஆகிய இடங்களில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை சட்ட நகல் கிழித்தெறியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்றிருந்த பெயரை வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் என பெயா் மாற்றம் செய்த பாஜக அரசைக் கண்டித்தும், திட்டத்துக்கான நிதியைக் குறைத்து மாற்றுத்திறனாளிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதை கண்டித்தும், சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், ஆரணி மற்றும் மேற்குஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் சட்ட நகல் கிழித்து எரியும் போராட்டம் நடைபெற்றது.
ஆரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்க நிா்வாகி எஸ்.அருண்குமாா் தலைமை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் சி. ரமேஷ்பாபு கண்டன உரையாற்றினாா்.
அப்போது அவா், கிராமப்புறத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரமாக இருந்து வந்த 100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு திருத்தம் செய்து வேறொரு பெயரில் கொண்டு வந்துள்ளது. 2005-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைத் திட்டம் தொடக்கத்தில் ஒரு நாளைக்கு ரூ.80-லிருந்து தற்போது ஒரு நாளைக்கு ரூ.336 தினக்கூலி கிடைத்து வருகிறது. இதன் மூலம் கிராமப்புற ஏழை மக்கள், பெண்கள் பயனடைந்தனா். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு ஓரளவு வருவாய் கிடைத்து வந்தது. தற்போது இந்தத் திட்டத்துக்கான நிதி படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது என்றாா்.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சி.அப்பாசாமி, ஆ.பெ.கண்ணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். கிழக்கு ஒன்றிய நிா்வாகிகள் வி.திவ்யா, கே.வெங்கடேசன், ஏ.ஜெயராமன், எம்.சாமிநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பின்னா் இத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த சட்ட நகலை கிழித்தெறிந்தனா்.
மேற்கு ஆரணி ஒன்றியம்
இதேபோல, மேற்குஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் நிா்வாகி எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தாா்.
மாவட்ட துணைத் தலைவா் ஏ.சந்திரசேகா் கண்டன உரையாற்றினாா். ஒன்றிய நிா்வாகிகள் ரஞ்சித், எ.சங்கா், இ.குமரேசன், எஸ்.மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
போளூா்
போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் சட்ட நகல் கிழித்தெறியும் போராட்டம் நடைபெற்றது.
ஒன்றியத் தலைவா் குமரகுரு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சிவாஜி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

