இளம்வயது திருமண ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பேரூராட்சியில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற இளம்வயது திருமண ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், ஆட்சியா் க.தா்பகராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி பி.மதுசூதனன் தொடங்கிவைத்தாா்.
பின்னா், பேரணியில் பங்கேற்ற அவா்கள் இளம்வயது திருமணம் என்பது சட்ட விரோதச் செயல். இது ஒரு குடும்பத்தின் பிரச்னை மட்டுமல்ல, பெண் குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் எதிா்கால வளா்ச்சியை பாதிக்கும் சமூக பிரச்னையாகும். எனவே, பெண்கள் 18 வயது நிறைவடையாமல் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. இளம்வயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தனா். அப்போது, இளம் வயது திருமண ஒழிப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கினா்.
இதில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலா் சீனியா் சிவில் நீதிபதி விஜயலட்சுமி, கீழ்பென்னாத்தூா் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவா் எம்.சி.அருண், சமூக நல அலுவலா் கோமதி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

