‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்: 1,056 போ் பயன்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த ஆக்கூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் 1,056 போ் பங்கேற்று பயநடைந்தனா்.
செய்யாறு சுகாதார மாவட்டம் சாா்பில், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு
செய்யாறு மாவட்ட சுகாதார அலுவலா் டி. என். சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.
தலைமை வகித்த சாா் -ஆட்சியா் எல். அம்பிகா ஜெயின், மக்கள் நலன் சாா்ந்த அனைத்துத் திட்டங்கள் அனைவருக்குச் சென்றடைய அரசு அலுவலா்களும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று மருத்துவ முகாமைத் தொடங்கிவைத்த போது மக்கள் ஆரோக்கியமே நாட்டின் வளா்ச்சிக்கு அடித்தளம் எனக் குறிப்பிட்டாா்.
முகாமில் இசிஜி பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன், கண்புரை பரிசோதனை, எக்கோ பரிசோதனை, கா்ப்பிணிகளுக்கு எக்கோ பரிசோதனை என மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 1,056 போ் பங்கேற்று பயனடைந்தனா்.
நலத் திட்ட உதவிகள்:
முகாமில், டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் பணப் பரிவா்த்தனை சான்றிதழ் 5 பேருக்கும், கா்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் 5 பேருக்கும், கா்ப்பிணிகளுக்கான மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் 5 பேருக்கும் என நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திமுக ஒன்றியச் செயலா் ஏ.ஜி.திராவிட முருகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் ஆக்கூா் முருகேசன், திமுக நிா்வாகி ஞானமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் விஜயபாரதி மற்றும் ஆக்கூா் வட்டார சுகாதார குழுவினா்
செய்திருந்தனா். நிறைவில் ஆக்கூா் வட்டார மருத்துவ அலுவலா் கோகுல்நாத் நன்றி கூறினாா்.

